குஜராத்தின் ஜாம்நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை விஷம் வைத்துக் கொன்று தொழிற்சாலையில் புதைத்துவிட்டு, அவர் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதாக நாடகமாடிய மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த ஜிக்னேஷ் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணாமல் போயிருந்தார். அவரிடம் தொடர்புகொள்ள அவரது குடும்பத்தினர் முயன்றபோதெல்லாம், அவர் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்றுவிட்டதாகவும், அங்கு அவர் பணிபுரியும் நிறுவனம் போனில் பேச அனுமதிப்பதில்லை என்றும் அவரது மனைவி பிரித்வி தொடர்ந்து பொய் கூறி வந்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற பிறகு அவர் இந்தியா திரும்புவார் என்றும் கூறி குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார்.
இந்நிலையில், ஜிக்னேஷின் உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு, அவரது தொடர்பு எண்ணை கேட்டபோது மனைவியின் பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக எச்சரித்ததை அடுத்து, 2 ஆண்டுகளுக்கு முன்பே கணவனைக் கொன்றுவிட்டதாக மனைவி ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து ஜிக்னேஷின் சகோதரர் அசோக் தர்மேஷ்பாய் மாதவ்ஜிபாய் மாவடியா, உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பிரித்வி தனது கள்ளக்காதலன் நிலேஷ் என்பவருடன் சேர்ந்து ஜிக்னேஷை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த 2024ம் ஆண்டு மே மாதத்தில், ஜிக்னேஷின் மதுபானத்தில் சயனைடு விஷத்தைக் கலந்து கொடுத்துக் கொன்ற இருவரும், அவரது உடலை ஜாம்நகர் நகருக்கு வெளியே காலியான தொழிற்சாலைக்குள் 12 அடி ஆழப் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர்.
இது குறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் பிரதிபா கூறுகையில், ‘மனைவி பிரித்வி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்தச் சதியை அரங்கேற்றியுள்ளார். தற்போது தடயவியல் நிபுணர்கள் மற்றும் செயல்முறை நடுவர் முன்னிலையில் தொழிற்சாலை வளாகத்தில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தார். புதைக்கப்பட்ட உடலின் எச்சங்களை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், தம்பதியரிடையேயான பிரச்சினைகள் அல்லது உறவுச் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும், வன்முறையோ கொலையோ ஒருபோதும் தீர்வாகாது. பிரச்சினைகளை சட்டப்பூர்வமான வழிகளிலும் உரையாடல் மூலமும் தீர்க்க முயற்சிப்பதே சரியான அணுகுமுறை. குற்றத்தை எவ்வளவு காலம் மறைக்க முயன்றாலும், உண்மை ஒரு நாள் வெளிவரும் என்பதையும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதையும் இதுபோன்ற சம்பவங்கள் நினைவூட்டுகின்றன.
