மாணவிக்கு நடந்த கொடுமை: ஆசிரியர்கள் 2 பேர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு கிராமத்தில் தனியார் மழலையர் பள்ளியில் 7வயது சிறுமி 2ம் வகுப்பு படித்து வருகிறார். 

அந்த பள்ளி ஆசிரியர் அகஸ்டின் (24), மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது தெரிந்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை திரண்டு பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து காடாம்புலியூர் போலீசார் விசாரித்து ஆசிரியர் அகஸ்டினை கைது செய்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போக்சோ வழக்கு பதிந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக மாத்தூர் கிராமத்தை சேர்ந்த சிவப்பிரகாசம்(50) உள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மூலம் புகார் பெட்டி வைக்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு அந்த பெட்டியை போலீசார் திறந்து பார்த்தபோது மாணவிகள் சிலர் ஆசிரியர் சிவப்பிரகாசம் தங்களிடம் தவறான முறையில் பேசுவதாக புகார் தெரிவித்திருந்தனர். 

இதனையடுத்து மாணவி ஒருவர் ஆசிரியர் சிவப்பிரகாசம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவரை போக்சோ வழக்கு பதிந்து நேற்று அதிரடியாக கைது செய்தனர்.