கணவனின் நண்பனின் மோசமான செயல்: குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த கதி!

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்ப பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்றைய தினம் (27.08.2026) உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் வசிக்கும் 68 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பெண் கடந்த 23ஆம் திகதி தனது கணகனின் நண்பனினால் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ஏ.எல்.முனாஸ் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது உயிரிழந்த பெண் தனது கணவரின் நண்பனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது குறித்த நபரினால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.