ஓமானில் மறைந்திருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கங்கானமகே திமுது சதுரங்க பெரேரா என்பவர் (மோதர சது அல்லது சமிட்புர சது என அழைக்கப்படுபவர்), குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கொழும்பு - 15, மோதர, சமிட்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதான திமுது சதுரங்க பெரேரா, 2025.03.22 அன்று போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து ஓமானுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
கனேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவத்தின் சந்தேகநபர்களில் ஒருவரான இவர், இது தவிர நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நபராவார்.
இவர் 08/18 அதிகாலை 04.53 மணிக்கு ஓமானின் மஸ்கட் நகரத்திலிருந்து, சலாம் எயர் விமான சேவைக்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 08/18 காலை 08.20 மணியளவில் கொழும்பு குற்றப் பிரிவிடம் (Colombo Crime Division) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
