‘அலைபாயுதே’ பட பாணியில் திருமணம் செய்து வர மறுப்பு; இன்ஸ்டா காதலன் வெறிச்செயல்

 

‘அலைபாயுதே’ பட பாணியில் திருமணம் செய்து வர மறுத்ததால் வீடு புகுந்து தாய், மகளை சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்த இன்ஸ்டா காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி (50). தனியார் நிறுவன செக்யூரிட்டி. இவரது மனைவி தனலட்சுமி (42). பனியன் நிறுவன டெய்லர். இவர்களது மகள் பூவரசி (22). பிளஸ் 2 படித்து விட்டு தனியார் பைக் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். பூவரசிக்கு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த மணிக்குமார் மகன் அக்சயன் (27) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 5 வருடத்துக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து பேசி பழகி, ஒரு கட்டத்தில் காதலர்களானார்கள். அக்சயன் கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி எம்சிஏ 2ம் ஆண்டு பயின்று வந்தார்.

இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது. அதன்படி, கடந்த 3 மாதத்துக்கு முன்பு ‘அலைபாயுதே’ பட பாணியில் பெற்றோருக்குத் தெரியாமல் நண்பர்கள் முன்னிலையில் பல்லடத்தில் உள்ள கோயிலில் இருவரும் திருமணம் செய்துள்ளனர். பூவரசி அவரது வீட்டிலும், அக்சயன் கல்லூரி விடுதியிலும் இருந்துள்ளனர். பூவரசியின் கழுத்தில் தாலி இருப்பதை அவரது பெற்றோர் பார்த்துள்ளனர். அப்போதுதான் அக்சயனை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதை பெற்றோரிடம் பூவரசி கூறியுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் பூவரசியை கண்டித்துள்ளனர். அப்போது, அக்சயன் கட்டிய தாலியை அவர்கள் அறுத்து விட்டதாகவும், அக்சயனிடம் இனிமேல் பேசக்கூடாது என்று எச்சரித்ததாகவும், மீறி பேசினால் தாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பெற்றோரின் இந்த கடும் எதிர்ப்பு காரணமாக அக்சயனுடன் பேசுவதை பூவரசி தவிர்த்து வந்தார்.