மகாராஷ்டிராவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்த 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்டம் ரைசிங்புரா பகுதியைச் சேர்ந்த சேத்தன் பிரகாஷ் கோலி (22) என்ற இளைஞர், சிறுவர்களுக்கு பணம் தருவதாக ஆசை காட்டி அழைத்துச் சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
மேலும், அதனைத் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி 2022ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வரை தொடர்ந்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். ரகசியத் தகவலின் பேரில் குற்றவாளியைப் பிடித்து அவரிடம் இருந்த செல்போனை சோதனையிட்ட போது, அதில் 600க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட எஸ்பி அஸ்வினி சனப் கூறுகையில், ‘சிறுவர்களைப் பண ஆசை காட்டி வரவழைத்து குற்றச் செயலில் ஈடுபட்ட சேத்தன் பிரகாஷ் கோலியை கைது செய்துள்ளோம். அவரது செல்போனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
2022ம் ஆண்டு முதல் அவர் இந்த அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. அதில் பாதிக்கப்பட்ட நபர்களை வீடியோக்கள் மூலம் அடையாளம் கண்டு, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்தார்.
