கடந்த 2024 ஆம் ஆண்டு இரண்டு பெரிய நாய்கள் தாக்கியதில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்த நாய்களின் உரிமையாளரான எட்மண்டன் பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நாள் குறைவான நிபந்தனை வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
46 வயதான கிரிஸ்டல் ஜீன் மெக்டொனால்ட், கடந்த 2024 ஏப்ரல் 1ஆம் திகதி தனது இரண்டு Cane Corso இன நாய்கள் தாக்கியதில் கேச் கிரிஸ்ட் என்ற 11 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில், கடந்த மே மாதம் குற்றவியல் அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்திய குற்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
எட்மண்டன் Court of King’s Bench நீதிபதி எரிக் மேக்லின், நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவருக்கு தண்டனை விதித்தார்.
தண்டனையின் ஒரு பகுதியாக, மெக்டொனால்ட் வாழ்நாள் முழுவதும் நாய்களை வளர்க்கவோ, மேற்பார்வை செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிபந்தனையில் இருந்து விலக்கு கோரி அவர் விண்ணப்பிக்கலாம்.
மேலும், அவர் 200 மணி நேர சமூக சேவை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாய்களுக்கு முறையான பயிற்சி அளிக்காமை, அவை முன்னர் மனிதர்களைத் தாக்கியிருந்தமையும் மேலும் இரண்டு செல்லப்பிராணிகளின் மரணத்திற்கும் தொடர்புடையதாக இருந்தமை ஆகியவை குற்றத்தின் தீவிரத்தை அதிகரிக்கும் காரணிகளாக நீதிபதி குறிப்பிட்டார்.
அதேவேளை, சிறுவன் கேச்சின் வயது மற்றும் அவரது பாதிக்கப்படக்கூடிய நிலை, அவர் உயிரிழந்த விதம் 'மிகவும் கொடூரமானது' என்பதும் நீதிமன்றத்தால் கவனத்தில் கொள்ளப்பட்டது.
எனினும், மெக்டொனால்ட் சிறுவனுக்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும் கேச்சின் மீது அக்கறை கொண்டிருந்தார் என்றும் சம்பவம் குறித்து மிகுந்த மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
“இந்த இரண்டு நாய்களும் கேச்சைக் கொல்லக்கூடியவை என்பதை மெக்டொனால்ட் அறிந்திருந்தார். ஆனால் அவை உண்மையில் அவ்வாறு செய்யும் என்று அவர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை,” என நீதிபதி கூறினார்.
மெக்டொனால்ட் தனது தண்டனையை பிரிட்டிஷ் கொலம்பியாவின் பென்டிக்டன் பகுதியில் அனுபவிக்கவுள்ளார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்த நிலையில், பாதுகாப்புத் தரப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நாள் குறைவான நிபந்தனைத் தண்டனையை கோரியிருந்தது.
இதற்கிடையில், மெக்டொனால்ட் தனது குற்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விண்ணப்பித்துள்ளார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
