மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவைக் கலைஞருமான கிளாரி புரோஸோ, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.
பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் தனக்குக் தீராத மன உளைச்சல் நீடிப்பதால், சட்டம் வழங்கும் கருணைக்கொலைக்குத் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த மே மாதம் அவசர மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி கரிசிமா மாதன், புரோஸோவின் வேதனைகள் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதிலும், சட்ட விலக்கு அளிப்பது சமூகத்திலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை நிராகரித்தார்.
அதேசமயம், 2024 ஆம் ஆண்டு புரோஸோ தாக்கல் செய்த அரசமைப்புச் சட்டப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை 14 நாள்களுக்குள் தொடங்குமாறு கனடா தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கனடாவில் 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, தீர்க்க முடியாத நோய் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்கள் கருணைக்கொலை கோர முடியும்.
ஆனால், மனநலப் பிரச்சினையை மட்டுமே காரணமாகக் கொண்டு கருணைக்கொலை கோருவதற்கு அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இத்தடையை நீடிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசிய புரோஸோ, "மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களைப் போன்ற சம உரிமையோ, உடல் சார்ந்த சுய உரிமையோ இல்லை என்பதை அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளது.
நான் தொடர்ந்து வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்." என வேதனையுடன் தெரிவித்தார்.
அரசமைப்புச் உரிமைகளின்படி மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கருணைக்கொலை உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்கான முதன்மை வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக புரோஸோவின் சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
