தென்மேற்கு டில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் 6 மாடி கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்ததில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர்.
தென்மேற்கு டில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் 6 மாடி கட்டடம் மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்தது. டில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்துக்கு அருகில் இக்கட்டிடம் அமைந்துள்ளதால் ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கட்டிடம் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு 12 தீயணைப்பு வாகனங்கள், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்.
அதிகாரப்பூர்வ மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்பாகவே, உள்ளூர் மக்கள் கைகளாலேயே இடிபாடுகளை அகற்றி இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கட்டடத்தின் உரிமையாளர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
