உடலை துண்டாடி பிரியாணி செய்த தம்பதி

 

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் பிரியாணி அண்டாவில் வேகவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதியை எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், மறுநாள் (ஆகஸ்ட் 5) ஆக்ரா கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது ரயிலின் பொதுப்பெட்டியிலிருந்த சிவப்பு நிற ட்ராலி பையிலிருந்து துர்நாற்றம் வீசியதுடன் இரத்தம் கசியவும் செய்தமையால், பயணிகள் ரயில்வே பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர். பொலிஸார் அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது, தலை மற்றும் சில பாகங்கள் இன்றி, மனித உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுப் பிளாஸ்டிக் பைகளில் சுடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பையில் இருந்த சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் பெயர் பொறித்த பிளாஸ்டிக் கவர் மூலம் விசாரணை சென்னையை நோக்கித் திரும்பியது.

சென்னை சென்ட்ரல் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், ஒரு ஆணும் பெண்ணும் அந்தப் பையை ரயில் நிலையத்திற்குக் கொண்டு வந்ததைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோவில் சென்றதை ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் கண்டுபிடித்த பொலிஸார், அவர்கள் தங்கியிருந்த பூட்டப்பட்டிருந்த வாடகை வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.

அப்போது வீடு முழுவதும் இரத்தக் களறியாகக் காட்சியளித்ததுடன், மனித உடல் பாகங்களைப் பிரியாணி அண்டாவில் போட்டு மைதா மாவு மற்றும் காய்கறிகள் சேர்த்து வேகவைத்த பயங்கரமான காட்சியைக் கண்டு பொலிஸார் உறைந்து போயினர். விசாரணையில், அவ்வீட்டில் ஒடிசாவைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர், அவரது மனைவி பகமதி மாஜி மற்றும் கொல்லப்பட்ட ஹைதுல் நிஷா என்ற பெண் ஆகியோர் வாடகைக்குக் குடியிருந்தது தெரியவந்தது. ஆக்ராவில் மீட்கப்பட்ட உடல் பாகங்களும் கூடுவாஞ்சேரி வீட்டில் கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களும் ஹைதுல் நிஷாவுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

தலைமறைவாகியிருந்த மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் பகாபதி மாஜி தம்பதியினர் கடந்த மாதம் 29ஆம் திகதி மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் தனிப்படைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுச் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். பொலிஸாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், யூடியூப் (YouTube) பார்த்து இந்தக் கொலையை அரங்கேற்றியதாகத் தெரிவித்தனர். செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  தம்பதியினரை வரும் 16ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.