அதிர்ந்தது தெஹிவளை: இரண்டு சிறுவர்களுக்கு நடந்த துயரம்

 


கொழும்பு, தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் சகோதரர்களான இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 10 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த தந்தை (வயது 52) தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.


திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும், தாக்குதல்காரர்களின் தவறான இலக்கு காரணமாகவே அப்பாவிச் சிறுவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


காயமடைந்த குடும்ப நபரின் சகோதரர், திட்டமிடப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான 'படோவிட்ட அசங்க' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது.


மேலும், தலைமறைவாக உள்ள  திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'கொஸ்மல்லி' என்பவரின் நெறிப்படுத்தலின் கீழேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஓட்டோ, பாதுக்க - பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


சந்தேகநபர் இந்த ஓட்டோவில் வந்துள்ளமை அருகில் உள்ள சிசிரிவி கமராக்களில் பதிவாகியிருந்ததன் அடிப்படையிலேயே பொலிஸார் இந்த வாகனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.


இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.