ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 101ஆவது அவதாரத் திருநாள்! கொழும்பில் சிறப்பாக நடைபெற்ற ஆன்மிக நிகழ்வுகள்!

 பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 101ஆவது அவதாரத் திருநாளை முன்னிட்டு, பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, கொழும்பின் ஏற்பாட்டில், கொழும்பின் பல்வேறு இடங்களிலும் இன்று (23.11.2026) சிறப்பு ஆன்மிக, கலாசார மற்றும் சமூக நிகழ்வுகள் பக்திபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.


இதன் ஒரு பகுதியாக, கொழும்பு 6, ராமகிருஷ்ண வீதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மண்டபத்தில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


இந்நிகழ்வுகள் வேத பாராயணத்துடன் ஆரம்பமாகியதுடன், SSE மற்றும் இளைஞர் அணியைச் சேர்ந்த சகோதரிகளின் இசைப் படைப்பான 'ஹிருதய சந்தேஷம்' (Hridaya Sandesham) இடம்பெற்றது. தொடர்ந்து, பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, கொழும்பின் தலைவர் வரவேற்புரையாற்றினார்.


இதனைத் தொடர்ந்து, SSE மாணவர்கள் மற்றும் கொழும்பு விவேகானந்தா கல்லூரி மாணவர்களின் பங்கேற்பில் 'தெய்வீக அன்பின் தாளங்கள்' (Rhythms of Divine Love) என்ற தலைப்பிலான சிறப்பு நடன நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.


மேலும், ஆசிய பசுபிக் சத்ய சாய் மனித விழுமியக் கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில், சாய் ஆன்மிகக் கல்வித் திட்டத்தின் (Sai Spiritual Education – SSE) சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


தொடர்ந்து, SSE மாணவர்கள், இளைஞர் அணியினர் மற்றும் வயது வந்த பக்தர்களின் பங்கேற்பில் 'ஷீர்டி கே சாய் – பார்த்தி கே பாபா' (Shirdi Ke Sai – Parthi Ke Baba) என்ற தலைப்பிலான நாடகம் அரங்கேற்றப்பட்டது.


அத்துடன், 'செயலில் அன்பு' (Love in Action) என்ற தொனிப்பொருளில், சமிதியினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகள் தொடர்பான அனுபவப் பகிர்வுகளும், அவற்றின் முன்னேற்றம் குறித்த விளக்கங்களும் இடம்பெற்றன.


இதனைத் தொடர்ந்து, பகவானின் தெய்வீகப் போதனை, பஜனை மற்றும் ஊஞ்சல் வழிபாடு ஆகிய ஆன்மிக நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மங்கள ஆரத்தியுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.


அன்பு, சேவை, ஆன்மிகம் – சத்ய சாய் போதனைகளின் அடிப்படை!


பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா உலகிற்கு எடுத்துரைத்த 'அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்' என்ற உயரிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வுகள் அமைந்திருந்தன.


குறிப்பாக, சிறுவயதிலிருந்தே மாணவர்களிடம் மனிதநேயம், ஒழுக்கம், ஆன்மிக விழுமியங்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் சாய் ஆன்மிகக் கல்வித் திட்டத்தின் முக்கியத்துவத்தையும், இளைஞர்களை சமூக சேவையில் ஈடுபடுத்துவதன் அவசியத்தையும் இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டின.



உண்மை, தர்மம், அமைதி, அன்பு, அகிம்சை ஆகிய ஐந்து மனித விழுமியங்களையும் வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம் தனிமனித மேம்பாட்டையும் சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்க முடியும் என்ற பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் போதனைகள் இன்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன.


இதேவேளை, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 101ஆவது அவதாரத் திருநாளை முன்னிட்டு, கொழும்பு 7, பேர்ன்ஸ் பிளேஸில் அமைந்துள்ள சாய் மந்திரிலும், கொழும்பு இந்து மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சிவானந்தா நிலையத்திலும் அதிகாலை முதல் விசேட வழிபாடுகள், ஓம்காரம், சுப்ரபாதம், நகர் சங்கீர்த்தனம், வேத பாராயணம், பஜனை மற்றும் மங்கள ஆரத்தி உள்ளிட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.


ஆன்மிக வழிபாடுகளுக்கு அப்பால், கல்வி, கலை, கலாசாரம் மற்றும் சமூக சேவையை ஒருங்கிணைத்து நடைபெற்ற இக்கொண்டாட்டங்கள், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மனிதநேயப் போதனைகளையும், அன்பின் வழியிலான சேவையின் மகத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தும் வகையில் அமைந்தன.