மறைந்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது வாழ்நாளில் எதிர்கொண்ட ஆன்மீகப் போராட்டங்கள், சாத்தான் மற்றும் நரகத்தின் தரிசனங்கள் குறித்த விரிவான தகவல்கள் ‘தி பிரைவேட் டைரி ஒஃப் போப் பிரான்சிஸ்’ என்ற நூலின் மூலம் வெளியாகியுள்ளன.
2025 ஏப்ரல் மாதம் காலமான பாப்பரசர் பிரான்சிஸின் இந்த தனிப்பட்ட குறிப்புகள், 1992 முதல் 2024 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியதாக 2026 நவம்பர் 24 (நேற்று) வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, பாப்பரசர் பிரான்சிஸ் தனது வாழ்நாளில் மூன்று முறை சாத்தானை நேரில் பார்த்ததாக 2021 ஜனவரி மாதக் குறிப்பில் எழுதியுள்ளார்.
முதல் முறை: அவர் அர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸ் நகரில் பேராயராக இருந்தபோது, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் ஜன்னலின் வழியாகப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த கண்கள் மிரட்டுவதாகவும், அதே சமயம் கவர்ந்திழுப்பதாகவும் இருந்ததாக அவர் விவரித்துள்ளார்.
இரண்டாம் முறை: கார்மலைட் தேவாலயத்தில் திருப்பலி நிகழும்போது, "நெருப்பு போன்ற கண்களுடன்" சாத்தான் தன்னைப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாம் முறை: பாப்பரசர் ஆண்டவராகப் பொறுப்பேற்ற பிறகு, சிலி நாட்டிற்குச் சென்று திரும்பிய சமயத்தில் ரோம் நகரில் நடைபெற்ற வத்திக்கான் அதிகாரிகளின் கூட்டத்தின்போது சாத்தானைப் பார்த்ததாகவும், "இப்போது நான் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிட்டேன்" என்று கரகரப்பான குரலில் அவன் வெற்றி முழக்கமிட்டதைக் கேட்டதாகவும் பதிவு செய்துள்ளார்.
2018 ஜூன் 7 அன்று எழுதப்பட்ட குறிப்பில், முந்தைய இரவு தூங்கச் செல்வதற்கு முன் "நரகத்தின் நுழைவாயிலை" (gates of hell) தான் கண்டதாக அவர் எழுதியுள்ளார். அதனை எட்டிப் பார்த்தபோது மிகுந்த அச்சம் ஏற்பட்டதாகவும், உடனடியாகத் தனது கையிலிருந்த ஜெபமாலையை ஒரு ஆயுதமாகப் பிடித்துக்கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாகவும் அவர் விவரித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் தொடங்கி இரண்டு ஆண்டுகள் தான் ஒரு கடுமையான ஆன்மீக இருளில் சிக்கியிருந்ததாக பாப்பரசர் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சபையின் உயரிய அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, மற்றவர்களைத் தன் சுயநலத்திற்காகக் "கைப்பாவைகளாக" ஆட்டுவிக்கும் ஒரு சர்வாதிகாரத் தலைவராக மாறிவிடக் கூடாது என்பதில் அவர் மிகுந்த மனப்போராட்டத்தைச் சந்தித்துள்ளார்.
சிலி பாலியல் அத்துமீறல் விவகாரம்: 2018இல் சிலி நாட்டில் பாதிரியார்கள் மீதான பாலியல் முறைப்பாடுகளைத் தான் ஆரம்பத்தில் தீவிரமாக எடுத்துக்கொள்ளாதது குறித்தும், பின்னர் அதன் உண்மைத்தன்மையை உணர்ந்தபோது மனம் உடைந்து போனது குறித்தும் அவர் வருத்தத்துடன் எழுதியுள்ளார். தனது ஆன்மீக இருளிலிருந்து விடுபடத் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தபோது, "இயேசு புன்னகைத்தார்... அவரின் இரக்கமுள்ள பார்வையை நான் உணர்ந்தேன்" எனப் பதிவு செய்துள்ளார். இந்த ஆன்மீக அனுபவத்தின் விளைவாகவே 2023இல் C'est la confiance என்ற திருத்தூது மடலையும், 2024இல் இயேசுவின் திரு இருதயம் குறித்த தனது இறுதிச் சுற்றுமடலான Dilexit nos நூலையும் அவர் எழுதியதாகக் கார்டினல் பெர்னாண்டஸ் விளக்கியுள்ளார். பாப்பரசர் பிரான்சிஸின் நெருங்கிய நண்பரும், வத்திக்கானின் விசுவாசக் கோட்பாட்டுத் துறையின் தலைவருமான கார்டினல் விக்டர் மெனுவல் பெர்னாண்டஸ் இந்த 160 பக்க நூலைத் தொகுத்துள்ளார்.
பாப்பரசர் பிரான்சிஸ் 1992 முதல் பயன்படுத்திய கருப்பு நிறத் தோல் அட்டை கொண்ட நாட்குறிப்புப் புத்தகத்திலிருந்து இந்தக் குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. அவரின் மறைவுக்குப் பிறகு தற்போதைய பாப்பரசர் லியோவின் அனுமதியுடன், மக்களின் ஆன்மீக நலனுக்காக இவை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
