செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள அறிக்கையை இறுதியான அறிக்கையாகக் கருத முடியாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணையை ஏற்பாடு செய்வதற்கோ அல்லது அதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ அரசாங்கம் இதுவரை முறையாக இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் மனுதாரர் கள் எவரும் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை பல கட்டங்களாகவும் அமர்வுகளாகவும் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 574 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் 41 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவை என்றும் 22 எலும்புக்கூடுகள் பச்சிளம் குழந்தைகளுடையவை என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வுப் பணிகள், யாழ்ப்பாணம் நீதவான், பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரி கலாநிதி பிரணவன் செல்லையா, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தடயவியல் அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், காணாமல் போனோர் அலுவலகம் 2025 ஏப்ரல் 29ஆம் திகதி நீதிமன்ற அனுமதியுடன், காணாமல் போனோர் அலுவலகச் சட்டத்தின் 12(ஈ) பிரிவின் கீழ் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள அறிக்கை, மனித எச்சங்கள் எவ்வாறு எங்கு, எந்தத் தொல்லியல் சுழ்நிலைகளில் புதைக்கப்பட்டன என்பதை ஆராய்ந்து நிறுவும் தடயவியல் தொல்லியல் அறிக்கையாகும். உயிரிழப்புக்கான காரணம் மற்றும் மரணத்தின் தன்மை தொடர்பான முடிவுகள் மருத்துவச் சட்டவியல் விசாரணைகள் ஊடாகவே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய, மனித எச்சங்கள் தொடர்பான நீதித்துறை தடயவியல் அறிக்கையைத் தயாரிக்குமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரி கலாநிதி பிரணவன் செல்லையா மற்றும் அவரது குழுவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த ஆட்சேபனைகளின் அடிப்படையில், பேராசிரியர் சோமதேவவின் அறிக்கையை வழக்குப் பதிவேட்டில் இணைக்குமாறும், அதன் அடிப்படையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் முதன்மையாக உள்நாட்டு நீதித்துறை மற்றும் புலனாய்வுப் பொறிமுறைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், டி.என்.ஏ பரிசோதனைகள், மனித எச்சங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட நீதிமன்றத்தால் அடையாளம காணப்படும் தேவைகளுக்கான மேலதிக தடயவியல் விசாரணைகளுக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
