டித்வா அனர்த்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

 


டித்வா  அனர்த்த நிலைமை காரணமாக வீடுகளை இழந்த கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 19 குடும்பங்களுக்காக புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (26) முடகமுவ பிரதேசத்தில் நடைபெற்றது.


பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இணையாக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவு காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


அதன்படி, பகுதியளவிலான சேத மதிப்பீடு இன்றி வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவின் இரண்டாம் தவணையாக 12 பயனாளிகளுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதமும், மீள்குடியேற்றக் கொடுப்பனவின் முதலாம் தவணையாக ஒரு பயனாளிக்கு 20 இலட்சம் ரூபாயும், இரண்டாம் தவணையாக 13 பயனாளிகளுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதமும், மூன்றாம் தவணையாக இரண்டு பயனாளிகளுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வீதமும் காசோலைகள் வழங்கப்பட்டன.


இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, அனர்த்தத்தில் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்து வசதிகளையும் மக்களுக்கு மீண்டும் வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு அமைய, கடந்த ஒரு வருட காலப்பகுதியில் அரசியல் அதிகாரசபை, அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகக் குறிப்பிட்டார்.


அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினேந்து சமன் ஹென்னாயக்க, பதுளை மாவட்டச் செயலாளர் சுனில் கலஹம, கந்தகெட்டிய பிரதேச சபைத் தலைவர் ஹர்ஷ ரத்நாயக்க ஆகியோர் உள்ளிட்ட கந்தகெட்டிய பிரதேச செயலக அதிகாரிகள், பயனாளி மக்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.