தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை ராணிவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மக்கள், சேதமடைந்த பிரதான வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி இன்று (26) பிற்பகல் 3 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நோனாதோட்டம் நகரிலிருந்து ராணிவத்தை தோட்டம் வரை செல்லும் சுமார் மூன்று கிலோமீற்றர் நீளமான பிரதான வீதி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த கடும் மழையினால் பெருமளவில் சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியூடான பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்கள், நோயாளர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மூன்று கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பெரிய ராணிவத்தை, சின்ன ராணிவத்தை, குட்டிமலை மற்றும் பம்பரகலை உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வீதியைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீதியின் மோசமான நிலை காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் தமது கடமைகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீதியைப் புனரமைத்துத் தருமாறு மலையக அரசியல் பிரதிநிதிகளிடம் கடந்த காலங்களில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும், இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வீதியின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதால், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு வீதியைப் புனரமைத்துத் தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பம்பரகலை தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் தமிழ் வித்தியாலயம் வரை பேரணியாகச் சென்றனர்.
கொட்டும் மழையிலும் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
