அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

 


குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி, குறித்த கொடுப்பனவு இன்று (27) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மிகவும் வறிய பிரிவைச் சேர்ந்த 381,369 குடும்பங்களும், வறிய பிரிவைச் சேர்ந்த 635,761 குடும்பங்களும் உள்ளடங்கலாக மொத்தம் 1,017,130 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு இன்று கிடைக்கப்பெறவுள்ளது. 

இதற்காக 12,142,055,250 ரூபாய் (12.14 பில்லியன் ரூபாய்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையால், நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் அவசர நிவாரணக் கொடுப்பனவொன்றை வழங்க கடந்த செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கமைய, மிகவும் வறிய பிரிவினருக்கு வழங்கப்படும் மாதாந்த அஸ்வெசும கொடுப்பனவான 17,500 ரூபாய்க்கு மேலதிகமாக 3,000 ரூபாயும், வறிய பிரிவினருக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 10,000 ரூபாய்க்கு மேலதிகமாக 2,000 ரூபாயும் இந்த மாதம் வழங்கப்படவுள்ளது.

இந்த அவசர நிவாரணக் கொடுப்பனவுக்காக அரசாங்கம் 2,415,629,000 ரூபாய் (2.41 பில்லியன் ரூபாய்) நிதியை ஒதுக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த மேலதிக நிவாரணத் தொகை நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.