திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படங்களை (Pre-shoot) எடுப்பதற்காக பொலிஸ் சீருடையில் தாடியுடன் கண்டி நகரில் காத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தலங்கம காவல் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முகம் முழுவதும் தாடி வளர்த்த நிலையில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சீருடையில் ஒருவர் கண்டி, யட்டிநுவர வீதி மற்றும் கொழும்பு வீதி சந்திப்புக்கு அருகில் நிற்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கண்டி தலைமையக பொலிஸ் சம்பவ இடத்திற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன்போது, குறித்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது தெரியவந்துள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள தனது திருமணத்தை முன்னிட்டு இந்து மத சம்பிரதாயத்தின்படி தாடி வளர்த்துள்ளதாகவும், தனது காதலியுடன் திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படங்களை எடுப்பதற்காக அங்கு காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்து மத சம்பிரதாயத்தின்படி திருமணத்தில் தாடியுடன் பங்கேற்பதற்கு பொலிஸ் மா அதிபரிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முகம் முழுவதும் தாடி வளர்ப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிக் பொலிஸ் அத்தியட்சகருமான உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் குறித்த உத்தியோகத்தர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
