சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரும் கோட்டாபய, இன்று நீதிமன்றத்தின் முடிவு!

 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக சற்று முன்னர் வருகை தந்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில், இன்று (25) ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானம் அறிவிக்கவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக அவர் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கும்படி அவர் கோரிக்கை முன்வைத்திருந்தார். மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, கோட்டாபய ராஜபக்சவின் சட்டக் குழுவினர் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன வழக்கின் தீர்மானத்தை இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

அந்தநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, கோட்டாபயவுக்கு சிங்கப்பூரில் மேலதிக சிகிச்சை தேவைப்படுவதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணக் கோரிக்கை நிராகரிப்பு. இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னரான மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரியிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கைது தடைகோரும் மேன்முறையீடு 2027 மார்ச் 5ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் இணைந்த வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) நிராகரித்துள்ளது.


இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரியே அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.


மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதாக அவர் தனது கோரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கடந்த 2026 ஜூன் 3ஆம் திகதி அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.


இதற்கு முன்னர் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது, முன்னாள் ஜனாதிபதி தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். எனினும், அப்போது அவர் சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை.


இந்நிலையில், இன்று கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதியின் பயண அனுமதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டை எதிர்வரும் 2027 மார்ச் 5ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.