இலங்கையின் மத்திய மலைநாட்டில் நிலநடுக்கம் அல்லது நில அதிர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மத்திய மலைநாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து உச்ச எல்லையை அண்மித்துள்ள நிலையில், இவ்வாறான நில அதிர்வு அபாயம் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கனமழைக்கு பின்னர் நீர்த்தேக்கங்கள் நீரால் நிரம்பும்போது, நீர்த்தேக்கங்களுக்கு கீழே உள்ள பாறை அடுக்குகளில் கடுமையான அழுத்தம் ஏற்படுகின்றது. இவை இலங்கைக்குள் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இதன் காரணமாக, பாறை அடுக்குகளில் பிளவுகள் ஏற்பட்டு அந்த பிளவுகளில் சிறிய அசைவுகள் ஏற்படுகின்றன. இந்த சிறிய அசைவுகளினால் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 5-6 ஆண்டுகளாக மத்திய மலைப்பகுதிகளில் அவற்றை பதிவு செய்து வரும் நிலையில், இலங்கையில் மேலும் நில அதிர்வுமானிகளை நிறுவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய மலைப்பகுதிகளில் 13-14 நில அதிர்வுமானிகள் மாத்திரமே நிறுவப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் கிழக்கு பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்கள் மாத்திரமே நாட்டை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் பேராசிரியர் கூறியுள்ளார்.
கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இந்தோனேசியாவின் அந்தமான் தீவுகளின் ஆழமற்ற கடற்பரப்பிற்கு அருகில் அதிர்வு ஏற்பட்டால் மட்டுமே இலங்கைக்கு ஆபத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
