2026 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை டிசம்பர் 4 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், திட்டமிடப்பட்டுள்ள கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை எந்தவித இடையூறுகளோ அல்லது மாற்றங்களோ இன்றி இந்த வாரத்திற்குள் நிறைவு செய்யுமாறு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரமே மூன்றாம் பாடசாலைத் தவணையின் இறுதி வாரமாக அமையும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
இன்று (29) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அனைத்துப் பாடசாலைகளும் தற்போதுள்ள கால அட்டவணைகளைப் பின்பற்றி, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தமது திட்டமிடப்பட்ட செயற்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
சில பாடசாலைகள் ஏற்கனவே தமது ஆண்டு இறுதிப் பரீட்சைகளை நிறைவு செய்துள்ளதாகவும், ஏனைய பாடசாலைகள் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, திட்டமிடப்பட்ட பாடசாலைச் செயற்பாடுகளில் எவ்வித மாற்றங்களோ அல்லது இடையூறுகளோ அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நவம்பர் 30 ஆம் திகதியை ஒரு சாதாரண பாடசாலை நாளாகக் கருதுமாறு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதுடன், திட்டமிடப்பட்ட அனைத்துப் பரீட்சைகள் மற்றும் ஏனைய பாடசாலைச் செயற்பாடுகளும் வழமைபோல் நடைபெறும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டிற்காக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை நாட்களின் எண்ணிக்கை, ஆண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் - குறிப்பாக 'தித்வா' (Ditwah) சூழ்நிலையைத் தொடர்ந்து பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டமை காரணமாக 197 நாட்களிலிருந்து 186 நாட்களாகக் குறைக்கப்பட்டிருந்ததாகச் செயலாளர் கலுவெவ தெரிவித்தார்.
இந்தக் குறைப்பைக் கருத்திற்கொண்டு, பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை என அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
எஞ்சியுள்ள பாடசாலைச் செயற்பாடுகள் அட்டவணைப்படி நிறைவடைவதை உறுதி செய்வதற்கு, அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
