ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில், செக்டர் 27 பகுதியில், (மே 26, 2025) இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூனைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்கள் பாகேஷ்வர் தாமில் நடைபெற்ற ஐந்து நாள் ஹனுமான் கதா நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்ச்குலாவிற்கு வந்திருந்த நிலையில் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் பிரவீன் மிட்டல் (42), அவரது மனைவி, பெற்றோர், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பூட்டிய காருக்குள் மயக்க நிலையில் கண்டு பிடிக்கப்பட்டனர். அவசர சேவைகள் மூலம் அருகிலுள்ள ஓஜாஸ் வைத்தியசாலை மற்றும் செக்டர் 6 சிவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்பே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர். பிரவீன் மிட்டல், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் உயிரிழந்தார்.
காரின் கண்ணாடி ஒரு துண்டால் மூடப்பட்டிருந்ததாகவும், ஒரு பயணி காரில் மயக்கமடைந்தவர்களைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் காரிலிருந்து ஒரு தற்கொலை கடிதத்தை மீட்டனர், அதில் கடுமையான கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், கடிதத்தின் முழு உள்ளடக்கம் வெளியிடப்படவில்லை.
இது தற்கொலை வழக்காகத் தோன்றுவதாகவும், முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் பஞ்ச்குலா பொலிஸின் துணை ஆணையர் (DCP) ஹிமாத்ரி கவுஷிக் தெரிவித்தார்.