சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சினால் செயல்படுத்தப்படும் 'அசிதிசி' புலமைப்பரிசில் பெறும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி திகதி 2025 ஜூன் 20 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும் 'அசிதிசி ஊடக புலமைப்பரிசில் திட்டம்', இந்த ஆண்டு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.'அசிதிசி ஊடக புலமைப்பரிசில் திட்டம் 2025' திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுகொள்வதற்கான இறுதித் திகதி மே 23 ஆம் திகதி வரை என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
18 முதல் 55 வயதுக்குட்பட்ட இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனயல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் 3 வருட சேவையை நிறைவு செய்த முழுநேர அல்லது பகுதிநேர அடிப்படையில் பணிபுரியும் ஊடகவியளாலர்கள், மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்கள், இணைய ஊடகவியலாளர்கள், ஊடகம் சார் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களுக்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் 2 முறை பயனடைய ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் முதல் புலமைப்பரிசில் வழங்கப்பட்டதில் இருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது வாய்ப்புக்கு வழங்கப்படும்.
இந்த புலமைப்பரிசில் திட்டத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் மற்றும் நீண்ட கால, குறுகிய கால சான்றிதழ் படிப்புகளுக்கு அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு ஒன்றுக்கு முகம்கொடுத்த பின்னரே புலமைப்பரிசில் வழங்கப்படும்.
'அசிதிசி' ஊடக புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை,
பணிப்பாளர் (ஊடகம்) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம்,
எண். 163, 'அசிதிசிய மெதுர',
கிருலப்பன மாவத்தை,
பொல்கெங்கொட,
கொழும்பு 05.
என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அல்லது, அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.media.gov.lk இன் ஊடாகவும் அனுப்பலாம்.
மேலதிக விபரங்களுக்கு 0112513645 / 0112514632 என்ற இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தவும். அல்லது http://www.media.gov.lk என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.