பாலம் கட்ட தோண்டிய குழியில் விழுந்து சம்பவ இடத்திலே பலியான தம்பதி-விடிய விடிய உயிருக்காக போராடிய மகள்..!

 

திருப்பூர் தாராபுரம் அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பைக் விழுந்து தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய போது பள்ளத்திற்குள் பைக் விழுந்ததில் தம்பதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். தம்பதியின் மகள் படுகாயத்துடன் விடிய விடிய உதவி கேட்டு சத்தமிட்ட நிலையில் இன்று காலையில் கல்லூரி மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சேவக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 42). டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஆனந்தி (38). இவர்களுக்கு தீட்ஷனா என்ற மகள் இருக்கிறார். தம்பதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனத்தை தாராபுரம் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு திருச்செந்தூர் மற்றும் திருநள்ளாறு கோவில்களுக்கு சுற்றுலா சென்று இருக்கின்றனர். தொடர்ந்து நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் தாராபுரம் பேருந்து நிலையம் வந்த அவர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சேவக்காரன்பாளையம் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது தாராபுரம் அருகே காங்கேயம் சாலையில் குள்ளாய்ப்பாளையம் மாந்தோப்பு அருகே சாலையில் ஒரு பாதியில் பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்துள்ளது. அந்த வழியாக நேற்று நள்ளிரவு 3.30 மணியளவில் மகள் தீக்‌ஷனா மற்றும் மனைவியுடன் நாகராஜ் பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த பள்ளம் இருந்த பகுதியில் வரும்போது எதிரே வாகனம் வந்துள்ளது.

இதனால் அந்த பள்ளம் தெரியவில்லை. மேலும் அதில் எச்சரிக்கை பலகை எதுவும் இல்லை. இதனால் பைக்கோடு பள்ளத்திற்குள் விழுந்தனர். பள்ளத்திற்குள் கான்கிரீட் போடுவதற்காக கம்பிகள் அங்கும் இங்குமாக நீண்டு கொண்டு இருந்துள்ளது. இதில் உள்ளே விழுந்த தம்பதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மகள் தீக்‌ஷ்னா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார்.

கதறி அழுதபடி விடிய விடிய சிறுமி பள்ளத்திற்குள் பரிதவித்தப்படி இருந்துள்ளார். இன்று காலையில் அந்த வழியாக கல்லூரி சென்ற மாணவர்கள் உள்ளே சிறுமி மற்றும் தம்பதி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர். இதையடுத்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து படுகாயத்துடன் கிடந்த சிறுமி தீக்ஷனாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

எச்சரிக்கை பலகை இல்லை

அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே உயிரிழந்த நாகராஜ், ஆனந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அவர்களது உறவினர்கள் அங்கு வந்து கதறி அழுதனர். சாலையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்திற்குள் விழுந்து கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் காங்கேயம் சாலையில் குள்ளாய்ப்பாளையத்தில் சாலையில் நடுவே பள்ளம் தொண்டப்பட்டு இருக்கும் நிலையில் அதற்கான எச்சரிக்கை பலகை இல்லாததே இந்த விபத்துக்கு காரணம் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும், ஏற்கனவே இதுமாதிரி பல இடங்களில் சம்பவங்கள் நடந்தபிறகும் அதிகாரிகள் ஏன் இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யாமல் பணி செய்து வந்தனர் என்றும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.


قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post