Posts

கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட பூனை-தனிசட்டம் கோரும் ஆர்வலர்கள்..!

 

தனிச்சட்டம் கோரும் ஆர்வலர்கள்

இந்தியாவில் விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டத்தை மீண்டும் கொண்டு வரக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


  (28) இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சட்டங்களை உருவாக்குவதும், திருத்துவதும் பாராளுமன்றத்தின் பணி என்று தெரிவித்தது. ஆனால், விலங்குகளின் நலனுக்காகப் பாடுபடும் அமைப்புகள், பழைய சட்டத்தின் விதிகளை நீக்கக்கூடாது என்று சில காலமாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


 இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377, ஒரு காலத்தில் 'இயற்கைக்கு மாறான குற்றங்கள் சட்டம் 1860' என்ற பெயரில் அறியப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், விலங்குகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனை விதிக்கப்படும்.


 தன்பாலின உறவு என்றழைக்கப்படும், வயது வந்த இரு ஆண்கள் அல்லது இரு பெண்களுக்கு இடையில், அவர்களின் விருப்பத்துடன் நடக்கும் பாலியல் உறவுகளையும் இந்தச் சட்டம் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதியது. ஜூலை 2024 இல் இந்திய தண்டனைச் சட்டம் (BNC) அமலுக்கு வந்தபோது, ​​அரசாங்கம் பிரிவு 377ஐ நீக்கியது.


 

விலங்குகள் மீதான வன்முறையைத் தண்டிக்க ஒரு சட்டம் இருந்தாலும், விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தண்டனை வழங்க வல்ல தனிச் சட்டம் எதுவும் தற்போது இல்லை.


 

மும்பையைச் சேர்ந்த பூர்ணிமா மோத்வானி நான்கு மாத பூனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதைப் பற்றி அறிந்தபோது, ​​அத்தகைய செயலைச் செய்பவர்களைத் தண்டிக்கும் சட்டத்தை இந்திய அரசு நீக்கியிருப்பது குறித்து அவருக்குத் தெரியாது.


 "பூனை மிகவும் பயந்து, பலவீனமாக இருந்தது. அது வெளிப்படையாகவே மிகுந்த வலியுடன் இருந்தது. அதன் காயங்கள் மிகவும் கடுமையாக இருந்தன. மருத்துவர் அதற்கு இரண்டு முறை தையல் போட வேண்டியிருந்தது," என்று அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார் பூர்ணிமா.


 பூனையைத் தாக்கிய நபருக்கு எதிராக புகாரளிக்க காவல் நிலையம் சென்ற பூர்ணிமா, அப்போதுதான் பிரிவு 377 நீக்கப்பட்டதைக் கண்டறிந்தார்.


 விலங்குகளைத் துன்புறுத்துவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் மட்டுமே பூர்ணிமாவால் புகார் அளிக்க முடிந்தது. இந்தச் சட்டத்தில் 50 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்க வழி உள்ளது. ஆனால் பிரிவு 377 இதைவிட மிகவும் வலிமையானது.


 இந்தக் காரணத்திற்காக, விலங்குகளின் நலனுக்காகப் பாடுபடும் 200 அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபியாபோ (Fiapo - இந்திய விலங்கு பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு), இந்தச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.


 'ஃபியாபோ'வில் சட்ட விவகாரங்களை மேற்பார்வையிடும் வர்னிகா சிங் இதுகுறித்துப் பேசினார்.


 அப்போது அவர், "பழைய சட்டத்தில், பாலியல் வன்முறை தெளிவாக வரையறுக்கப்பட்டு இருந்தது. இதுவொரு கொடூரமான குற்றமாகக் கருதப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக வெளியில் இருந்தால், விலங்குகளை மீண்டும் தாக்கும் அபாயம் இருப்பதால், இந்தச் சட்டத்தின் கீழ் போலீஸ் காவலில் எடுக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது" என்று வர்னிகா தெரிவித்தார்.


 விலங்குகள் மீதான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் புகார் அளிக்க தனக்குச் சிறிது நேரம் எடுத்துக் கொண்டதாகவும் பூர்ணிமா தெரிவித்தார்.


 "நான் பல முறை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன். காவல் நிலையத்திற்குச் சென்றேன். உண்மையாக இந்த வழக்குகளில் நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் இதை ஒரு நகைச்சுவையாகப் பார்த்தார்கள்" என்று பகிர்ந்து கொண்டார் பூர்ணிமா.


 புகார் அளிக்கப்பட்ட நேரத்தில், பூனையைத் தாக்கியவர் தப்பி ஓடிவிட்டார். இன்று வரை அவர் கைது செய்யப்படவில்லை. அருகில் இருந்தவர்கள் நன்கு கவனித்துக் கொண்டதாலும், அவர்களின் உதவியாலும், பூனையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.


 பூர்ணிமா அந்த பூனைக்கு 'கிரேஸ்' என்று பெயரிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, கிரேஸுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. பின்னர் தாக்குதலுக்கு ஆளான இரண்டு வாரங்களில் கிரேஸ் இறந்துவிட்டது.


 இந்தியாவில், விலங்குகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் எளிதில் வெளிச்சத்திற்கு வருவதில்லை. அது சட்டப்படி குற்றமாக இருந்தாலும், யாராவது ஒருவர் விலங்கு தாக்கப்படுவதை நேரில் பார்த்து, அதைப் பதிவு செய்தால் மட்டுமே காவல்துறைக்கு தகவல் செல்லும்.


 அதுமட்டுமல்ல, அந்த நபர் அதுகுறித்து ஏதாவது ஒரு சமூக ஆர்வலரிடம் தெரிவித்திருக்க வேண்டும். தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau) சமீபத்திய தரவுகள்படி, 2019 மற்றும் 2022க்கு இடையில் பிரிவு 377இன் கீழ் சுமார் ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


 ஆனால் இவற்றில் எத்தனை வழக்குகள் விலங்குகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பானவை என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, இந்தச் சிக்கலின் அளவை முழுமையாக மதிப்பிடுவதும் கடினமாக உள்ளது.


 அதனால்தான், விலங்குகளுக்கு எதிரான பல்வேறு வகையான வன்முறைகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க தேசிய குற்றப் பதிவுப் பணியகத்திற்கு (NCRB-க்கு) உத்தரவிடுமாறு ஃபியாபோ அமைப்பு நீதிமன்றத்திலும் முறையிட்டது.


டிசம்பர் 2024இல், நடிகை ஜெயா பட்டாச்சார்யா ஒரு மாத நாய்க்குட்டிக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றி அறிந்தார். 20 ஆண்டுகளாக விலங்குகளின் நலனுக்காகப் பணியாற்றி வரும் ஜெயா, மும்பையில் விலங்குகளுக்கான தங்குமிடம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.


 நாய்க்குட்டிக்கு உணவளிப்பதாகக் கூறி, அதன் மீது தாக்குதல் நடத்தியவர் அதைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், சிறிது நேரத்திற்குப் பிறகு 'அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகள் அது வலியால் அழுவதைக் கண்டனர்' என்றும் அவர் குறிப்பிட்டார்.


 அதன் பின்னர் தனது சமூக ஊடகப் பக்கங்களில் நாய்க்குட்டியைப் பற்றி பதிவிட்டார் ஜெயா. விலங்கு வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது.


 குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார், ஆனால் சில மணிநேரங்களில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். "இதுபோன்ற ஆண்கள் நமது சமூகத்தின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் தண்டிக்கப்படாதபோது, ​​மற்றவர்களைக் காயப்படுத்த அவர்கள் தயங்குவதில்லை" என்று ஜெயா கூறினார்.


 விலங்குகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஒருவர் மனிதர்களையும் குறிவைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் இதுகுறித்துப் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.


அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் விலங்குகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது குற்றமாகக் கருதப்படுகிறது. மேலும் இந்தக் குற்றத்திற்கு இரண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் வழி உள்ளது.


 


'அமெரிக்க மனநல மருத்துவம் மற்றும் சட்ட அகாடமியின் இதழில்' ஓர் ஆய்வு வெளியிடப்பட்டது. அந்த ஆய்வில், 1975 முதல் 2015 வரை அமெரிக்காவில் விலங்குகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 456 பேர் கைது செய்யப்பட்ட வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.


 


அதில், மூன்றில் ஒரு பகுதியில், விலங்குகளைத் துன்புறுத்தியவர், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எதிராகவும் பாலியல் வன்முறை செய்துள்ளார் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவிலும் சில சந்தர்ப்பங்களில் காணப்பட்டுள்ளது.


 


ஆகஸ்ட் 2024இல் புலந்த்ஷாஹரில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு நபர் ஒரு ஆட்டுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதைப் பராமரித்து வந்த பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.


 


சிறுமியின் வழக்கறிஞர் வருண் கௌசிக் இதுகுறித்துக் கூறுகையில், 


 


"பக்கத்து வீட்டு ஜன்னலில் இருந்து, இரண்டு வகைத் தாக்குதல்களிலும் அந்த நபர் ஈடுபடுவதைப் பார்த்த ஒரு சிறுவன், அதைத் தனது தொலைபேசியில் பதிவு செய்தான். அந்தச் சிறுவன் இரண்டு வீடியோக்களையும் சிறுமியின் தந்தையிடம் காட்டியுள்ளான். அது நடக்காமல் இருந்திருந்தால், இந்தக் கொடூரமான குற்றம் ஒருபோதும் வெளிச்சத்திற்கு வந்திருக்காது" என்றார்.


 


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவதில்லை. எனவே அந்த நபர் இன்னும் சிறையில் இருக்கிறார், விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.


 


பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1860ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் சட்டத்தில் இன்னும் நடைமுறையில் உள்ளது. இந்திய அரசாங்கம் இந்தப் பிரிவை நீக்குவதற்கு முன்பாகவே, விலங்கு உரிமை ஆர்வலர்கள் விலங்கு வதைத் தடுப்புச் சட்டத்தை கடுமையாக்கவும், அதில் பாலியல் வன்முறையைச் சேர்க்கவும் கோரிக்கை வைத்து வந்தனர்.


 


ஃபியாபோ அமைப்பு, 2010 மற்றும் 2020க்கு இடையில் வெளியான விலங்குகளுக்கு எதிரான கொடுமை குறித்த ஊடக செய்திகளைச் சேகரித்தது. அவற்றின்படி, ஆயிரம் வழக்குகளில் 83 வழக்குகள் விலங்குகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பானவை.


 


இருப்பினும், இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு வழக்குகளில் எந்த முதல் தகவல் அறிக்கையும் (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்படவில்லை. இந்தக் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு 2022ஆம் ஆண்டு விலங்கு வதைத் தடுப்புச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை உருவாக்கியது. பாலியல் வன்முறைக்கான வரையறை அதில் சேர்க்கப்பட்டது.


 


இந்த வன்முறைக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.


 


இந்தத் திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, விலங்குகளின் உரிமைகளுக்காகப் பாடுபடும் ஆர்வலர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.


 


"சட்டம் கடுமையாகவும், அனைவருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் இருந்தால், இதுபோன்ற கொடூரமான குற்றங்களைச் செய்வதற்கு முன்பே அந்த யோசனையை நிறுத்துவார்கள்" என்கிறார் பூர்ணிமா மோத்வானி.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.