அமெரிக்காவில் சமூக ஊடகங்களில் வைரலான 'டஸ்டிங்' சவாலை முயற்சித்த 19 வயது இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் அரிசோனாவைச் சேர்ந்த ரென்னா ஓ'ரூர்க். சமூக ஊடகங்களில் அதிக பார்வையாளர்களைப் பெறுவதற்காக 'டஸ்டிங்' மற்றும் 'குரோமிங்' என்றும் அழைக்கப்படும் இந்த சவாலை ரென்னா முயற்சித்தார்.
டஸ்டிங் என்பது கணினி கீபோர்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ஸ்ப்ரேயை உள்ளிழுத்து சுவாசிக்கும் ஒரு சவாலாகும்.
ரென்னா தனது பெற்றோருக்குத் தெரியாமல் ஆன்லைனில் ஏரோசல் கீபோர்டு கிளீனரை ஆர்டர் செய்து இந்த சவாலை முயற்சித்துள்ளார். ஸ்ப்ரேயை சுவாசித்த ரென்னாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த 1 வாரம் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (07) உயிரிழந்தார்.
"நான் ஒரு நாள் பிரபலமாவேன், நீங்களே பாருங்கள்" என்று ரென்னா தன்னிடம் அடிக்கடி கூறுவாள்,ஆனால் அவள் இப்படித் தனது மரணத்தின் மூலம் பிரபலமாவாள் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என ரென்னாவின் தந்தை கண் கலங்கி கூறுகிறார்.
இதுபோன்ற ஸ்ப்ரேக்களை வாங்க எந்த அடையாள அட்டையும் தேவையில்லை என்பதால் குழந்தைகளுக்கு கூட இது எளிதில் கிடைக்கிறது. எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தங்கள் மகளுக்கு நேர்ந்தது யாருக்கும் நேர கூடாது என்றும் ரென்னாவின் தாய் எச்சரித்தார்.
ரசாயனங்களை உள்ளிழுப்பது தற்காலிகமாக போதையை உணரவைக்கும் அதே வேளையில், அது விரைவாக மரணத்திற்கு வழிவகுக்கும். மரணம் பெரும்பாலும் இதய செயலிழப்பு காரணமாக ஏற்படுகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.