மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய போகோ ஹரம் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்தும் அடிக்கடி தாக்குதல் இடம்பெற்று வருகின்றன.
15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு அட்டூழியம் செய்து வரும் இந்த பயங்கரவாத அமைப்பினர் இதுவரை ஏராளமானோரை கொன்று குவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோரை அவர்களது வீடுகளில் இருந்து விரட்டியடித்து உள்ளனர்.
எனவே பயங்கரவாத குழுக்கள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இதனை கட்டுப்படுத்த ராணுவம் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் தொடர்ந்து தாக்குதல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் போர்னோ மாகாணம் மைராரி பஸ் நிலையத்தில் பலர் நின்று கொண்டிருந்தனர். அங்கு பஸ் வந்ததும் பயணிகள் பலர் அதில் ஏற முயன்றனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.