வவுனியாவில் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்-உண்மையில் நடந்தது என்ன-பொது எழுத்தாளர் ஒருவரின் பார்வையில்..!

 

திருமணம் என்பது இரு மனங்கள் இணைந்து வாழும் ஆயிரம் காலத்து பயிர். ஆனால் அந்த திருமணங்களே இன்று முறிந்து நீதிமன்ற படியேறுவதும், இரு மனங்களும் வெறுத்து ஒருவரையொருவர் குறை கூறுவதும், அடிபிடி, சண்டை, கொலை என நீண்டு செல்லும் ஒரு புதிய கலாசாரத்தை நோக்கி தமிழ் சமூகம் செல்வது தான் வேதனையான விடயம்.


அந்தவகையில் கடந்த செவ்வாய்கிழமை வவுனியா, நெடுங்கேணி, அனந்தர்புளியங்குளம், நொச்சிக்குளம் கிராமத்தில் இடம்பெற்ற சமபவம் முழு இலங்கையையும் உலுக்கியிருந்தது.


வவுனியா, நெடுங்கேணி,  பாடசாலையொன்றின் ஆரம்பப் பிரிவு ஆசிரியரான சுவர்ணலதா என்ற 32 வயது இளம் ஆசிரியரின் தலையை வெட்டிக் கொண்டு அவரது கணவனான 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவமே அது.


அந்தச் சம்பவம் இடம்பெற்ற பின் சமூக ஊடகங்களில் குறித்த கணவன் தொடர்பாகவும், மரணமடைந்த ஆசிரியை தொடர்பாகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் பரவி வருவதுடன், கொலையை ஊக்குவிக்கும் கருத்துக்களும் பரவி வருகின்றன.


உண்மையில் நடந்தது என்ன...?


யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளைஞன் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலை வாய்ப்பு தேடி சென்றிருந்தார்.


அங்கு இருந்த போது சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட நட்பின் காரணமாக சுவர்ணலதாவுக்கும் சுகிர்தரனுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்திருந்தது.


5 வருடங்களுக்கு முன்னர் குறித்த திருமணம் நடந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.


சிறந்த தோட்டச் செய்கையாளரான சுகிர்தரன் தனது மனையின் வீட்டில் இருந்து அவர்களது காணியில் தோட்டம் செய்து வந்துள்ளார்.


அவர்களது வாழ்க்கை பயணம் சந்தோசமாகவே இந்நாட்களில் ஓடியிருந்தது.


இருவரும் இணைபிரியாது உலா வந்தனர். தனது மனைவியை செல்லமாக ''அம்மு'' என சுகிர்தரன் கூப்பிட்டு வந்துள்ளார்.


அவ்வளவு தூரம் அவர்களது வாழ்க்கை சந்தோசமாகவே ஆரம்பத்தில் அமைந்திருந்தது.


ஒரு வருடத்திற்கு முன் அவர்களது கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத் தெரிவு ஒன்று இடம்பெற்றிருந்தது.


இதன்போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் அடிதடியில் முடிந்திருந்தது. இதன்போது சுகிர்தரனுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. சில நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றிருந்தார்.


அப்போது தான் அவர்களது வாழ்வில் விதி விளையாட ஆரம்பித்தது.

கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் சிறிய உதவிகளை சுவர்ணலதா தான் முன்னர் கற்பித்த பாடசாலையில் உயர்தரம் பயின்ற அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மூலம் அவ்வப்போது பெற்றுக் கொண்டாள்.

ஒரே கிராமத்தவர்கள். ஒரே பாசாலையில் ஆசிரியர் - மாணவர் என்ற அடிப்படையில் அவர்களுக்குள் இருந்த நட்பின் காரணமாக குறித்த 21 வயது இளைஞர் ஆசிரியருக்கு உவிகளை செய்து இருவரும் நட்பாக இருந்துள்ளனர்.

சிகிச்சை முடிந்து வந்த கணவரும் மீண்டும் சந்தோசமாக குடும்பத்துடன் இருந்துள்ளார்.

காயம் ஏற்பட்டு சிகிச்சை செய்ததால் கடும் வெயிலில் வேலை செய்ய வேண்டாம் என வைத்தியர்களால் ஆலோசனை கூறப்பட்டிருந்தது.

இதனால் சிறப்பாக தோட்டம் செய்த சுகிர்தரனின் கைகள் ஓய்ந்திருந்தது.

என்னதான் உலகம் வளர்ச்சியடைந்து மேலைத்தேச கலாசாரம் எமது நாட்டில் பரவி இருந்தாலும், ஒரு ஆணும், பெண்ணும் பழகுவதை எமது சமூகம் பலவாறாக பேசும்.

அவ்வாறாறே குறித்த ஆசிரியைக்கும், 21 வயது இளைஞனுக்கும் இடையில் இருந்த நட்பை சிலர் பலவாறாக பேச ஆரம்பித்தனர்.

இது சுகிர்தரனின் காதில் பட்டதும் அன்பு பிணைப்பாக இருந்த கணவன் - மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் அவ்வப்போது சண்டைகளும், ஊடல்களும் இடம்பெற்றிருந்தது.

எனினும் மனைவி - கணவன் என்ற பாச பிணைப்புடன் அவர்களது குடும்பம் உருண்டோடிக் கொண்டிருந்தது.

வேலை இல்லாததால் சுகிர்தரன் உறவினர்களின் வேண்டுதலின் அடிப்படையில் கொழும்புக்கு மேசன் வேலைக்காக சென்றிருந்தார்.

கணவன் - மனைவிக்கு இடையில் அவ்வப்போது சண்டைகளும் ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் கொழும்பில் வேலை செய்வது. சில நாட்கள் மனைவியை பார்க்க வருவது என சுகிர்தரனின் நாட்கள் நகர்ந்தன.

இந்த நிலையிலேயே சுகிர்தரன் கொழும்பில் இருந்து வந்து தனது காதல் மனையின் தலையை துண்டிக்கும் அளவுக்கு சென்றிருந்தார்.

இது தொடர்பில் அவர் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்ததாவது,

தனது மனைவி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் அதில் ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை (29.05) தனது தொலைபேசிக்கு மனைவியுடன் நட்பாக பழகும் 21 வயது இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் மறுநாள் வெள்ளிக்கிழமை (30.05) கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர், இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டதன் பிரகாரம் எவ்விதமான பதிலும் கூறவில்லை.

செவ்வாய்கிழமை (03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே அவர் சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீட்டர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் பொலிசாரிடம் கூறி இருக்கின்றார்.

இதன் பின்னர் தான் கொலை செய்ததாக புளியங்குளம் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர்.

இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி இருந்தனர்.

இவ்வாறு சுகிர்தரன் வாக்கு மூலம் வழங்கிய போதும் இதில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையானவையா என்பது குறிததும் ஆராயப்பட வேண்டியுள்ளது.

21 வயது இளைஞனும், ஆசிரியரும் நட்பாக இருந்தார்கள் என்பது உண்மை. அதனை அவர்களது உறவினர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

அந்த இளைஞனால் தமது குடும்பத்திற்குள் பிரச்சனை, சந்தேகம் ஏற்பட்டதால் ஆசிரியையான சுவர்ணலதா கடந்த சில நாட்களாக குறித்த இளைஞன் உடனான தொடர்பை துண்டித்து அவரை புறக்கணித்து நடந்து வந்துள்ளார்.

தான், தனது கணவன், புதிதாக பிறக்கவிருக்கும் தனது குழந்தை என தமது இல்லற வாழ்வை சந்தோசமாக கொண்டு செல்வதற்காக அவள் அந்த முடிவை எடுத்திருந்தாள்.

ஆனாலும் அவள் கதைக்கவில்லை. தொடர்பை முறித்து விட்டதால் மனமுடைந்த இளைஞன் பல முறை ஆசிரியையுடன் தொடர்பு கொள்ள முயன்றதுடன், கணவனிடமும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஆனால் என்ன பேசினார் என்பது இருவருக்குமே வெளிச்சம்.

ஆனாலும், கணவன் கொடுத்த வாக்குமூலம் போன்று குறித்த இளைஞரிடம் இருந்து எந்த புகைப்படமோ,  காணொளி அனுப்பப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.

சுகிர்தரனின் தொலைபேசியில் அவ்வாறானதொரு படமோ, காணொளியோ இல்லை என்கின்றனர் புளியங்குளம் பொலிசார்.

அதேபோல், குறித்த இளைஞனுக்கும், மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக ஆசிரியையின் சகோதரனுக்கு கொலைக்கு முதல் நாள் மாலை சுகிர்தரன் தெரியப்படுத்திய போதும், அவர்களுக்கும் எந்தவொரு படத்தையோ, காணொளியோ காட்டவில்லை.

ஆனால் 21 வயது இளைஞருடன் ஆசிரியைக்கு தொடர்பு என்ற கருத்தையே கூறியுள்ளார்.

திருமணமாகி நீண்ட காலத்திற்கு பின்னர் ஆசிரியை கர்ப்பாக இருந்துள்ளார். சுகித்தரனுக்கு அந்த கர்ப்பம் தன்னுடையதா என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.அந்த சந்தேகமே கொலையில் முடிந்துள்ளது.

கொல்லப்படுவதற்கு முதல் நாள் வவுனியாவில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றுக்கு தனது மனைவியை அழைத்துச் சென்ற சுகிர்தரன், ஸ்கேன் பரிசோதனை செய்து தனது மனைவி கர்ப்பம் என அறிந்ததும், மகிழ்சியடைந்துள்ளார்.

குறித்த செய்தியை ஆசிரியை தனது அண்ணிக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த மருத்துவ மனைக்கு வருகை தந்த அண்ணிக்கு சுகிர்தரன் பழங்கள் வாங்கிக் கொடுத்து சந்தோசமாக இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

வவுனியா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரனை அதிகாரியான க.ஹரிபிரசாத்திடம் குறித்த மரணம் தொடர்பாக கேட்டபோது, மரணத்துக்கு காரணம் கழுத்துக்கு பகுதி வெட்டப்பட்டதனால் நாடி நாளங்களால் ஏற்பட்ட அதிக இரத்த போக்கே காரணம்.

வயிற்றில் இருந்த கரு 7 கிழமைகள். அதாவது 50 நாட்கள் முடிவடைந்துள்ளது.

டிஎன்ஏ பரிசோதனை

இக்கரு யாருடையது என்பதை கண்டறிவதற்காக மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், டிஎன்ஏ முடிவுகள் வந்த பின்னரே உண்மை தன்மை தெரியவரும்.

டிஎன்ஏ முடிவுகள் வந்த பின்னர் கணவர் இது தொடர்பில் ஒரு முடிவை எடுத்திருக்கலாம்.

32 வயது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்ததால் கணவன் சாதித்தது என்ன..! | Husband Beheads Wife In Shocking Act Vavuniya

எதுவாகினும் இரு உயிர்களை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எந்த சட்டத்திலும் இடமும் இல்லை. பிடிக்கவில்லை என்றால் ஆதாரங்களை காண்பித்து பிரிந்து இருக்கலாம் என தனது ஆதங்கத்தை அவர் தெரிவித்துள்ளார்.

அன்று மாலை வரை சந்தோசமாக இருந்த அவர்களது வாழ்வில் இரவு நடந்தது தான் என்ன...?

இரவு 8 மணியளவில் சுகிர்தரன் தனது மனைவியின் தந்தையிடம் சென்று கத்தியை வாங்கியுள்ளார். அந்த கத்தியால் தான் மறுநாள் தனது மனைவியை கொலை செய்துள்ளார்.

திங்கள் கிழமை மாலை தொடக்கம் இரவு வரை நடந்தது என்ன..? சுகிர்தரன் அவர்கள் குழப்பம் அடைந்து இந்த நிலைக்கு சென்றதற்கு காரணம் என்ன..? அந்தக் காலப்பகுதியில் அவரது தொலைபேசிக்கு அழைப்பு எடுத்தது யார்? அந்த அழைப்பில் பேசப்பட்ட விடயங்கள் என்ன? அவையே இந்த முடிவுக்கு காரணம்...?

பிடிக்கவில்லை என்றால் பிரிந்து செல்வதற்கும், தனித்து வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. அல்லது சட்டப்படி விவாகரத்து கொடுத்து விட்டு வேறு திரும்ணம் செய்து விரும்பியவருடன் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

அதற்காக ஒருவரை கொலை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை. இந்த கொலையால் கணவன் சாதித்தது என்ன..?

நாளை டிஎன்ஏ பரிசோதனையில் அந்தக் குழந்தை சுகிர்தரனின் தான் என்று வந்தால் அவரது மனநிலை எப்படி இருக்கும்...?

கொலைக்கு பின்னர் சிறை சென்ற கணவன் இனி சாதிக்கப் போவது என்ன...?

தனது வாழ்க்கையையும் கம்பிக் கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டது தான் மிச்சம். ஆகவே, கோபத்தில் எடுக்கும் அவசர முடிவுகள் தீர்வல்ல.

அவை ஆழமாக யோசித்து சிந்தித்து எடுக்கப்பட வேண்டியவை. வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அனைவரும் உணரவேண்டும். 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 08 June, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் எமது தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.