நேற்றையதினம் வட்டுக்கோட்டை சந்தியில் 789 வழித்தட பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து தடம் புரண்டது. இதில் 18பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் பலர் அபாயகரமான நிலையில் காணப்பட்டதாகவும் எனக்கு அழைப்பு வந்தது.
உண்மையில் நடந்தது என்ன?
நேற்றையதினம் (17.07.2025) எனது சித்தியை அவரது வீட்டில் விடுவதற்காக எனது வீட்டில் இருந்து அவரை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தேன். அண்ணளவாக வட்டுக்கோட்டை சந்தியில் இருந்து 100 மீற்றர்கள் தொலைவில் குறித்த பேருந்து சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. அதன் வேகம் அண்ணளவாக மணிக்கு 10-15 கிலோமீற்றர்களில் இருந்திருக்கும். அப்போது நேரம் பி.ப 2.54 இருந்திருக்கும்.
அந்த பேருந்தை நான் வலது பக்கத்தால் முந்திச் செல்ல முற்பட்டவேளை பேருந்து மெதுமெதுவாக வலது பக்கம் நகர ஆரம்பித்தது. பேருந்தினை வலது பக்க வயல் கரையுடன் நிறுத்துவதற்கு சாரதி முயற்சிக்கிறார் என நினைத்த நான் இடது பக்கத்தால் முந்திச் சென்றேன். பேருந்தானது வலது பக்கத்திற்கு நகர ஆரம்பித்த இடத்தில் இருந்து அண்ணளவாக 10-15 மீற்றர்கள் நகர்ந்து முழுவதுமாக வலது பக்க வீதி/வயல் கரைக்கு சென்றது. அப்போதும் பேருந்தின் வேகத்தடுப்பு பயன்படுத்தப்படவில்லை. அப்படியே சென்ற பேருந்து வயலுக்குள் விழுந்தது.
உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தி சித்தியை இறக்கிவிட்டு பேருந்தை நோக்கி ஓடினேன். அப்போது எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் அந்த இடத்தில் இல்லை. முதலாவதாக 10 வயது மதிக்கத்தக்க ஒரு பாடசாலை மாணவன் பேருந்து வாயில் கதவினூடாக மேலே ஏறி வந்தான். அப்போது அவனைப் பார்த்து "நீ மட்டுமா தம்பி இருந்தனி" என்று கேட்டேன் அதற்கு அவன் "இல்லை இன்னும் ஆட்கள் இருக்கினம்" என்றான். அந்தநேரத்தில் வீதியில் சென்றவர்களும் அவ்விடத்திற்கு வந்தார்கள்.
பின்னர் பேருந்தில் இருந்தவர்கள் ஒவ்வொருத்தராக மேலே ஏறி வந்தார்கள். அப்போது நானும், வீதியில் சென்றவர்களும் இணைந்து அனைவரையும் பேருந்தில் இருந்து இறக்கினோம். அப்போது யாருக்கும் எந்தவிதமான வெளி காயங்களுக்கு காணப்படவில்லை. அனைவரும் சாதாரணமாக எழுந்து நடந்து வந்தே பேருந்தில் இருந்து இறங்கினார்கள். பேருந்தில் அண்ணளவாக 15பேர் இருந்தார்கள். அதில் இருந்த எவரும் வைத்தியசாலைக்கு செல்லும் நிலையில் இல்லை. பேருந்து கம்பிகளில் அடிபட்டு சிறிய வலிகள் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அதனை அந்த இடத்தில் வெளிக்காட்டும் அளவிற்கு ஒன்றும் பெரிதாக இல்லை.
அனைவரையும் இறக்கிய பின்னர் பேருந்தில் வந்த ஒருவரிடம் சாரதியின் சாரத்தியத்தை பற்றி கேட்டேன். அப்போது அவர் மிகவும் நேர்த்தியாக பேருந்தினை செலுத்தி வந்ததாக அந்த பயணி கூறினார். பின்னர் பொலிஸார், மக்கள், என அனைவரும் அந்த இடத்தில் குவியவும் செய்திக்கு தேவையான படங்கள், காணொளிகள் என்பவற்றை சேகரித்துவிட்டு சித்தியை ஏற்றிக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றேன்.
பின்னர் சித்தியை அவரது வீட்டில் இறக்கி விட்டு அங்கு நின்றவாறு எனது அலைபேசியை எடுத்து பார்த்தபோது சிலரது அழைப்புகள் வந்திருந்ததை அவதித்தேன். இவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போது வேறொரு அழைப்பு வந்தது. அழைப்பின் மறுமுனையில் இருந்த நண்பன் வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மையில் பேருந்து விபத்து என்று கூறினான். நான் அதற்கு குறித்த விபத்து பற்றி தெரியும் என அவனிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தேன்.
அதற்கு பின்னர் வந்த 4 அழைப்புகளில் ஒவ்வொரு தகவல்கள் எனக்கு கிடைத்தது. அதாவது 18 பேர் காயம், பலர் ஆபத்தான நிலையில் உள்ளார்கள், நோயாளர் காவு வண்டி (ஆம்புலன்ஸ்) வந்து காயப்பட்டவர்களை ஏற்றுகின்றதாம், ஒருவருடைய கதை அந்த இடத்திலேயே முடிந்து விட்டதாம். இப்படி பல தகவல்கள். அந்த அழைப்பில் இருந்த சிலர் சம்பவ இடத்தில் இருந்தார்கள், சிலர் சம்பவ இடத்தில் இல்லை என்பதனை அவர்கள் கூறியதில் இருந்து தெரிந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து நான் மீண்டும் அவ்விடத்திற்கு வந்து பொலிஸாரிடம் விடயத்தை கேட்டபோது "சாரதி, ரேடியேட்டருக்கு தண்ணீர் விட்டுக்கொண்டு சாரத்தியம் செய்ததால் விபத்து நிகழ்ந்தது " என்று பொலிஸார் கூறினர்.
அதில் இருந்தவர்கள் தங்களுக்குள்ளே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கற்பனை கதையை நிஜம்போல் கூறிக்கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அக்கா ஒருவர் கூறினார் தான் அந்த வழியால் செல்லும்போது வயலுக்குள் சரிந்த பேருந்து நிமிர்ந்து நின்றதாகவும், பின்னர் தற்போது சரிந்து உள்ளதாகவும் கூறினார். அப்போது நான், முதலே பேருந்து முழுமையாக சரிந்துவிட்டது என்று கூறினேன். அப்போது அவர் மீண்டும் கூறினார் இல்லை பேருந்து நிமிர்ந்து நின்றது என்று. அதற்கு மேல் நான் அவருடன் வாதிட விரும்பவில்லை.
ஒரு பொய்யான தகவலை பரப்புவதால் அப்படி என்ன நன்மை உங்களுக்கு ஏற்படப்போகிறது? கற்பனையில் கதை கூறுவதில் என்ன பயன் இருக்கிறது? வதந்திகளாலும், பொய்யான தகவல்களாலும் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் சிந்தியுங்கள். உங்களுக்கு ஒரு விடயம் தெரியா விட்டால் அதைப்பற்றி கருத்துரைக்காதீர்கள். நீங்கள் ஊகிக்கின்ற விடயத்தை இது எனது ஊகம் என்று கூறுங்கள். ஆனால் அது தான் நடந்தது என்று கூறாதீர்கள். பல தடவைகள், பல சம்பவங்கள் குறித்து இவ்வாறு போலியான தகவல்கள் எனது செவிகளுக்கு கிடைத்தன. அதில் இருந்து சிறிய மாற்றம் என்றாலும் ஏற்படாதா என்ற அவாவில் இதனை எழுதியுள்ளேன்.