செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே அம்மனூர் கிராமத்தில் வசித்து வந்த 27 வயதான சுபாஷ், மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். அவருடன் அவரது பெரியப்பா மகன் சுரேந்தரும் இதே பணியில் இருந்தார்.
சம்பவத்தன்று நள்ளிரவு, வாங்க அண்ணே ஒரு ரவுண்ட் போகலாம் என கூறி, தன்னுடைய அண்ணன் சுபாஷை அழைத்து கொண்டு பைக்கில் புறப்பட்டுள்ளார் சுரேந்தர்.

திருமணமாகாத இந்த இருவரும் ஒன்றாக வேலைக்குச் சென்று வந்தனர். சுபாஷ் நீண்ட நேரம் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் எவ்வளவு தேடியும் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சுபாஷின் புகைப்படத்துடன் தேடுதல் பணியைத் தொடங்கினர். இதனிடையே, அம்மனூர் அருகே ஒதுக்குப்புறமான சாலையில் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், உயிரிழந்தவர் சுபாஷ் என்பதை உறுதிப்படுத்தினர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மோப்ப நாய் உதவியுடன் விசாரணை தொடங்கிய காவல்துறையினர்,
கொலை நடந்த இடத்திற்கு அருகே மஞ்சள் பூசப்பட்ட கல்லின் முன் ரத்தக்கறை படிந்த கத்தியையும், சுபாஷின் சட்டைத் துண்டையும் கைப்பற்றினர். அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சுபாஷை கொலை செய்தவர் அவரது பெரியப்பா மகன் சுரேந்தர் என்பதை கண்டறிந்து கைது செய்தனர்.
விசாரணையில், சுரேந்தர், “காளி தேவி இறங்கி பலி கேட்டதால் சுபாஷை கொலை செய்தேன்” என வாக்குமூலம் அளித்தார். ஆனால், குடும்பத்தினர் அவர் ஒரு வாரமாக பித்து பிடித்தவர் போல நடந்ததாக தெரிவித்தனர்.
மேலும், சுரேந்தர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது வேறு காரணத்திற்காக இந்நாடகம் ஆடுகிறாரா என காவல்துறை தீவிரமாக விசாரித்தது. விசாரணையில், சுபாஷும் சுரேந்தரும் ஒரே பெண்ணை காதலித்து வந்தது தெரியவந்தது.
இந்த மும்முனை காதல் போட்டியில், சுரேந்தர் தனது அண்ணனை கொலை செய்தது தெரியவந்து காவல்துறையினரை அதிர்ச்சியடையச் செய்தது.