காலி பொலிஸாரால் ஹிக்கடுவையில் 14.8 கிராம் ஹெரோயின் கைப்பற்றல்: பொலிஸ் நாய் “பெர்சி”யின் மோப்ப சக்தியால் கைப்பற்றல்
ஹிக்கடுவை, நலகஸ்தெனிய பகுதியில் உள்ள ஆடம்பரமான இரு மாடி வீடொன்றில், கழிவறை நீர்த்தொட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14.8 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை காலி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த வெற்றிக்கு பொலிஸ் மோப்ப நாய் “பெர்சி”யின் கூர்மையான மோப்ப சக்தி காரணமாக அமைந்தது.வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காலி பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த வீட்டில் விரிவான சோதனையை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் எந்தவொரு போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. சந்தேக நபரின் கணவர் மற்றும் குழந்தைகள் வீடு திரும்பும் வரை சோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், போதைப்பொருள் மோப்ப நாய் பெர்சி (எண் 1511) அழைத்து வரப்பட்டது. பெர்சி, மாடி கழிவறையின் நீர்த்தொட்டிக்குள் பொலித்தீனில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயினை வெற்றிகரமாக கண்டுபிடித்தது.
மேலதிக விசாரணைகளில், சந்தேக நபர் ஆர்டர் கிடைக்கும் போது, பொலித்தீனில் சுற்றப்பட்ட போதைப்பொருள் பொட்டலங்களை மாடியிலிருந்து சுவர் வழியாக வெளியே வீசுவதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 39 வயதான பெண் வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.