இந்தியாவின் கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் பிரசித்தி பெற்ற கோவில் அமைந்துள்ளது.
இந்நிலையில் தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தில் முன்பு துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிந்த ஒரு தலித் நபர், 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள், பாடசாலை மாணவிகள் உள்ளிட்டோரின் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக தட்சிண கன்னடா காவல்துறையிடம் திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கோரியுள்ள அந்த நபர், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மனசாட்சி உறுத்தலால் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஜூலை 3 அன்று தர்மஸ்தலா காவல் நிலையத்தில் தட்சிண கன்னடா எஸ்.பி. அருண் கே தெரிவித்தார். நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த நபர் தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் எஸ்.பி. கூறினார்.
மேலும் புகார் அளித்தவர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு கோரியுள்ளார். அவர் தனது புகாருடன், சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்களின் எச்சங்களின் புகைப்படங்களையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.
அவரது புகாரில், "நான் புதைத்த உடல்களின் எச்சங்களை தோண்டி எடுக்க வேண்டும் என்று காவல்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன். சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு, நான் எனது குடும்பத்துடன் தர்மஸ்தலாவை விட்டு வெளியேறி அண்டை மாநிலத்தில் மறைந்து வாழ்ந்தோம்.
நாங்களும் கொல்லப்படுவோம் என்ற பயம் தினமும் எங்களை வாட்டுகிறது. நான் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன், 1995 முதல் டிசம்பர் 2014 வரை தர்மஸ்தலா கோயிலில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்தேன். நான் நேத்ராவதி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்தேன்.
ஆரம்பத்தில் நான் பல உடல்களைப் பார்த்தேன், அவர்கள் தற்கொலை அல்லது தற்செயலான நீரில் மூழ்கியிருக்கலாம் என்று கருதினேன். பெரும்பாலான உடல்கள் பெண்களின் உடல்கள், அவற்றில் பெரும்பாலானவை ஆடைகள் இல்லாமல் இருந்தன. சில உடல்களில் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலின் அறிகுறிகள், கழுத்தை நெரித்தல் மற்றும் பிற காயங்கள் இருந்தன.
1998 இல், எனது மேற்பார்வையாளர் உடல்களை ரகசியமாக அப்புறப்படுத்தும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் மறுத்து, காவல்துறையிடம் புகார் அளிப்பேன் என்று சொன்னபோது, நான் கொடூரமாக தாக்கப்பட்டேன். என்னையும் என் குடும்பத்தைக் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள்.
எனது மேற்பார்வையாளர் உடல்கள் கிடந்த குறிப்பிட்ட இடங்களுக்கு என்னை அழைப்பார், அவற்றில் பலவும் சிறுமிகளின் உடல்கள். இதில் ஒரு சம்பவம் என்னை என்றென்றும் துரத்துகிறது. 2010 இல், கல்லேரியில் ஒரு பெட்ரோல் பங்கில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமி இறந்து கிடந்தார்.
அவர் பாடசாலை சீருடை அணிந்திருந்தார், அவரது பாவாடை மற்றும் உள்ளாடைகள் காணாமல் போயிருந்தன, மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்ததற்கான அடையாளங்கள் இருந்தன. அவரது பாடசாலை பையுடன் அவரை புதைக்க ஒரு குழி தோண்டும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.
மற்றொரு சம்பவத்தில், 20 வயது பெண்ணின் முகம் ஆசிட்டால் எரிக்கப்பட்டிருந்தது, அவரது உடல் செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது, மேலும் அவரது உடலை எரிக்கும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். அந்த கொலைகளுக்கு நான் ஒரு சாட்சியாக இருந்தேன். நான் பல உடல்களை புதைக்கவும் சிலவற்றை எரிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டேன்.
2014 இல், எனது குடும்பத்தில் ஒரு சிறுமி எனது மேற்பார்வையாளருக்குத் தெரிந்த ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். நாங்கள் தப்பிச் செல்ல முடிவு செய்தோம், நான் எனது குடும்பத்துடன் தர்மஸ்தலாவிலிருந்து ஓடிவிட்டேன். அப்போதிருந்து நாங்கள் அண்டை மாநிலத்தில் எங்கள் அடையாளங்களை மறைத்து, வீடுகளை மாற்றி வாழ்ந்து வருகிறோம்.
பாதிக்கப்பட்டவர்களையும், அந்தக் கொலைகளுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளையும் வெளிப்படுத்துவதே எனது நோக்கம். சமீபத்தில் நான் தர்மஸ்தலாவுக்குச் சென்று ரகசியமாக ஒரு உடலின் எச்சங்களை தோண்டி எடுத்தேன். படங்கள் எடுக்கப்பட்டு காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகள் தர்மஸ்தலா கோயில் நிர்வாகம் மற்றும் பிற ஊழியர்களுடன் தொடர்புடையவர்கள். உடல்களைப் புதைக்கும்படி என்னை மிரட்டி, சித்திரவதை செய்வார்கள். குற்றவாளிகள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள், தங்களை எதிர்ப்பவர்களை அவர்கள் அளித்துவிடுவார்கள்.
எனக்கு பாதுகாப்பு கிடைத்தவுடன் அவர்களின் பெயர்களையும், அவர்களின் பங்களிப்புகளையும் வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன். மேலும் உண்மையை நிலைநாட்ட பாலிடெக்ட் அல்லது வேறு எந்த சோதனைக்கும் நான் தயாராக இருக்கிறேன். புதைக்கப்பட்ட உடல்கள் மரியாதைக்குரிய இறுதி சடங்குகளைப் பெற வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். இதனிடையே உடல்களை தோண்டி எடுக்க பொலிஸார் முடிவெடுத்துள்ளனர்.