காஞ்சிபுரம் மாவட்டம் : படப்பை அருகே வாஞ்சுவாஞ்சேரி பகுதியில் இயங்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவிகள், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.
இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவி, மற்றொரு மாணவி குளிக்கும் போது, செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட மாணவி, வீடியோ எடுத்த மாணவியிடம் விளக்கம் கேட்டார்.

ஆனால், அவர் பதில் அளிக்காமல் மௌனமாக இருந்தார். பின்னர், அவரது செல்போனை பரிசோதித்தபோது, அந்த வீடியோவை மாணவி தனது காதலனுக்கு அனுப்பியது தெரியவந்தது.இந்தச் சம்பவம் விடுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், குளியலறையில் கழட்டி போட்ட உடைகளில் செல்ஃபோனை மறைத்து வைத்து தோழிகளுக்கு சந்தேகமே வராமல் பல முறை வீடியோ பதிவு செய்துள்ளார் அந்த மாணவி.
பாதிக்கப்பட்ட மாணவி, சக மாணவிகளுடன் இணைந்து, மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இக்பால் (27) என்பவரை கைது செய்தனர்.
முகமது இக்பால், இந்த வீடியோவைப் பயன்படுத்தி மாணவிகளை மிரட்டினாரா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும், கைது செய்யப்பட்டவரின் செல்போனை பறிமுதல் செய்து, அதில் உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.இந்தச் சம்பவம், 2023இல் கர்நாடகாவின் உடுப்பி தனியார் கல்லூரியில் மாணவிகள் குளியலறையில் வீடியோ எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தை நினைவூட்டுகிறது.
அந்த சம்பவத்தில், மூன்று மாணவிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கல்லூரி நிர்வாகமும் பொறுப்பேற்றது. தற்போதைய வாஞ்சுவாஞ்சேரி சம்பவத்தில், மாணவியின் தனியுரிமையை மீறிய செயல், கல்லூரி மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. காவல்துறை, இந்த வீடியோ பரவியதற்கு வேறு நபர்கள் தொடர்புடையவர்களா என்பதையும், மிரட்டல் நோக்கம் இருந்ததா என்பதையும் ஆராய்ந்து வருகிறது.
இந்தச் சம்பவம், கல்லூரி விடுதிகளில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை உறுதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.