விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள புல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரமணி (32), விருத்தாச்சலத்தில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வந்தவர்.
இவர் தனது வீட்டில் உடல் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரமணியின் கணவர் அசோக், தனது குழந்தைகளை தனது தாயார் வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவானதால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. காவல்துறையினர் பல இடங்களில் தேடுதல் நடத்தி, பன்ருட்டி பேருந்து நிலையத்தில் அசோக்கை கைது செய்தனர்.
விசாரணையில், அசோக் தனது மனைவி ரமணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.அசோக் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ரமணி, தனக்கு தெரியாமல் மற்றொரு நபரை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும், பெரம்பலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பலருடன் தொடர்பில் இருந்ததாகவும் அசோக் கூறினார்.
இந்தத் தொடர்புகளை நிறுத்துமாறு கேட்டபோது, ரமணி தன்னை கொலை செய்ய மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.கணவன்-மனைவி ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 18 அன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதன்போது அசோக் ரமணியை தாக்கினார்.
பின்னர், ரமணி உயிருடன் இருந்தால், தனது கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து தன்னை கொலை செய்துவிடுவார் என பயந்து, கோபத்தில் அவரை கொலை செய்ததாக அசோக் கூறினார்.
இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஏழு ஆடியோ பதிவுகள். ஒரு ஆடியோவில், ரமணி அசோக்கை மிரட்டுவதாக பதிவாகியுள்ளது: "நீ என்னை தொந்தரவு செய்தால், உன் சாவு என் கையில் இருக்கும்.
உன்னை லாக் பண்ணி உள்ளே தூக்கி வைப்பேன். நீ என்னை பகைத்தால், ஆள் வைத்து உன்னை தூக்குவேன்," என்று கூறுகிறார். மற்றொரு ஆடியோவில், ரமணி தொடர்பில் இருப்பதாக கூறப்படும் காவல் உதவி ஆய்வாளருடன் பேசுவதாகவும், அவர் அசோக்கை, "உன் பொண்டாட்டி ஒழுக்கமாக இல்லை என்று என்னை திட்டுகிறாயா?" என திட்டுவதாகவும் பதிவாகியுள்ளது.
இந்த ஆடியோக்களின் அடிப்படையில், ரமணியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் துணை தாசில்தார், காவல் உதவி ஆய்வாளர், காவல் ஏட்டு உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறை தயாராகி வருகிறது.
இந்த சம்பவம் புல்லூர் மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.