ஓசூர் அருகே சூழகிரி மாதரசனப் பள்ளியைச் சேர்ந்த மாணவி லட்சுமி (18) சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் மரணத்திற்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி, பெற்றோரும் உறவினர்களும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூழகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி லட்சுமி, கடந்த பிப்ரவரி மாதம் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றபோது, டிப்பர் லாரி மோதியதில் வலது காலில் எலும்பு முறிவு மற்றும் பலத்த காயங்களுடன் பாதிக்கப்பட்டார்.
உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை அங்கு சிகிச்சை பெற்றார். இதற்காக பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
பின்னர், ஓசூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடர்ந்தது. ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை மாணவி அங்கு சிகிச்சையில் இருந்து வந்தார். மருத்துவர்கள் தொடர்ந்து டிரஸ்ஸிங் உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால், நேற்று மாணவியின் முதுகின் கீழ்ப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாகி இரவில் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை மாணவியின் மரணச் செய்தியை பெற்றோருக்கு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோரும் உறவினர்களும் மருத்துவமனை முன்பு குவிந்து, மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், உடலை ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி மருத்துவமனைக்குள் கொண்டு சென்று, தவறான சிகிச்சைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) அத்தை அணில் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்புவதற்கு சமாதானம் செய்ய முயன்றனர்.
இருப்பினும், உறவினர்கள் சமாதானமடையாமல் போராட்டத்தை தொடர்கின்றனர். மாணவியின் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு மேலதிக விசாரணை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சை குறித்து உறவினர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.