கோயம்புத்தூர், பேரூர் செட்டிபாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு (ஒக்.24) சொகுசு கார் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வேகமாகக் பயணித்துக்கொண்டிருந்த அந்தக் காரில் ஐவர் பயணித்துள்ளனர். அங்குள்ள வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்டபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரத்தில் இருந்த புளியமரம் ஒன்றில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் காரின் பெரும்பகுதி சிதைவடைந்து நொறுங்கியுள்ளது. காரில் இருந்த சிலர் வீதியில் தூக்கி வீசப்பட்டனர். மேலும் சிலர் காருக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தைப் பார்த்த பாதசாரிகள் உடனடியாக பேரூர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேரூர் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காரில் பயணித்த ஐவரில் நால்வர் சடலங்களாக மீட்கப்பட்டனர். படுகாயமடைந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். பொலிஸாரின் விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த பிரகாஷ் (22), தஞ்சாவூர் மாவட்டம் பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (20), புதுக்கோட்டை மாவட்டம் குமாரமங்கலத்தைச் சேர்ந்த சபரி ஐயப்பன் (21), அரியலூர் மாவட்டம் செந்துரை தாலுக்காவைச் சேர்ந்த அகத்தியன் (20) ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது. மேலும், காயமடைந்தவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த பிரபாகரன் (19) எனத் தெரியவந்தது. இதில் காரை பிரகாஷ் ஓட்டி வந்துள்ளார். உயிரிழந்த பிரகாஷ், ஹரிஷ் மற்றும் சபரி ஐயப்பன் ஆகியோர் கோயம்புத்தூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியர்களாகவும், அகத்தியன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத் துறையில் 3ஆம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. அத்துடன், காயமடைந்த பிரபாகரனும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டு படித்து வருபவர் என்பதும் தெரியவந்தது. இந்த விபத்திற்குக் காரணம் கார் அதிவேகமாக வந்ததே என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
