நாட்டில் வாகன இறக்குமதிக்காக இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்களை திறக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் சுமார் $1.8 பில்லியன் டொலர் வரை கடன் கடிதங்களை திறக்க அனுமதி அளித்திருந்தாலும், இதுவரை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு இதுவரை சுமார் 60% வாகனங்கள் மட்டுமே வந்தடைந்துள்ளன, அதன் பெறுமதி சுமார் $1.2 பில்லியன் டொலராகும்," என்று பிரதி அமைச்சர் கூறினார். அரசாங்கம் ஆரம்பத்தில் வாகன இறக்குமதியாளர்களுக்கு $1.2 பில்லியன் டொலர் வரை கடன் கடிதங்களைத் திறக்கவே அனுமதி அளித்திருந்தது. எனினும், கடன் கடிதங்களின் மொத்த மதிப்பு இந்த எல்லையை அடைந்தபோது, அரசாங்கம் படிப்படியாக இந்த எல்லையை $1.8 பில்லியன் டொலர் வரை அதிகரித்தது. தற்போதைய நிலையில், கடன் கடிதங்களும் இந்தத் திருத்தப்பட்ட எல்லையை அடைந்துவிட்டதாகவும் பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.
