கிளிநொச்சி - தெற்கு வலயக் கல்விப்பணிமனை அருகில் ஏ9 வீதியில், கடந்த வருடம் இதே நாளில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்த இருவரின் நினைவாக நேற்றைய தினம் விபத்து நடைபெற்ற இடத்தில் குடும்பத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையம் விபத்து நடைபெற்ற நேரமான 6.10 விபத்தின் போது உயிர் தப்பிய சிறுமியினால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த வருடம் இதே நத்தார் தினத்தில் கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவேளை, மதுபோதையில் தவறாக செலுத்தப்பட்ட டிப்பர் வாகனத்தில் மோதுண்டு இரண்டு வயது சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மற்றைய மூவரும் காயங்களுக்குள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தாயாரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
