தைப்பொங்கல் தினத்தன்று (15) 8 வயது சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 35 வயது சந்தேகநபர் ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியும் சந்தேகநபரும் நாவலப்பிட்டியில் உள்ள வெஸ்ட்வேர்ல்ட் தோட்டத்தின் ரிலாகல பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று (15) மதியம் குடிபோதையில் இருந்த சந்தேகநபர் சிறுமியை அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அழைத்துச் சென்று சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுச்சென்றுள்ளார்.
நீண்ட நேரம் வீட்டில் இல்லாத சிறுமியை பெற்றோர் தோட்டத்தில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் உதவியுடன் தேடியுள்ளனர். இதன்போது தோட்ட வீட்டின் மேலிருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டதும், உறவினர்கள் சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு காணாமல்போயிருந்த சிறுமியை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுமி சந்தேகநபரின் பெயரை வெளிப்படுத்தி நடந்த விபரங்களை கூறியுள்ளார்.
