ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அம்பியுலன்ஸ் வண்டி இன்று அதிகாலை ஹபரணை பகுதியில் விபத்துக்குள்ளானதில், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் மற்றும் கூட்டுறவுச் சங்கத் தலைவர் உட்பட நால்வர் பலத்த காயமடைந்துள்ளனர். ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க வைத்தியசாலைக்குச் சொந்தமான குறித்த அம்பியுலன்ஸ் வண்டி, இன்று தம்புள்ளை - ஹபரணை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏறாவூர் நகர சபை உறுப்பினரான அல்ஹாபிழ் உவைஸ், சக்கூர் ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் முகம்மது சக்கூர், அவரது மனைவி, அம்பியுலன்ஸ் சாரதி முகம்மது அஸீம் ஆகியோரே காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அதிகாலை வேளையில் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

