இந்தியாவின் பெங்களூருவில் மூவரை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் ஏமாற்ரிய கல்யாண ராணியை பெங்களூரு பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
பெங்களூரு தொட்டபள்ளாப்புராவைச் சேர்ந்த அனந்தமூர்த்தி என்ற இளைஞர், 'கல்யாண ராணி' ஒருவரின் காதல் வலையில் விழுந்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றும் அனந்தமூர்த்திக்கும், சுதாராணி என்ற பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தனது முதல் கணவர் இறந்துவிட்டதாகவும், இரண்டு குழந்தைகளுடன் ஆதரவற்று இருப்பதாகவும் கண்ணீர் மல்க சுதாராணி கூறிய கதையை நம்பிய அனந்தமூர்த்தி, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவரை ஒரு கோவிலில் வைத்து மணம் முடித்தார்.
வாழ்க்கை சுமுகமாகச் சென்றுகொண்டிருந்த வேளையில், கடந்த நவம்பர் மாதம் ஹைதராபாத்திற்கு வேலை விஷயமாகச் சென்ற சுதாராணி மர்மமான முறையில் மாயமானார்.
அவரைத் தேடி அலைந்த அனந்தமூர்த்திக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. சுதாராணியின் முதல் கணவர் வீரேகவுடா உயிருடன் இருப்பதும், தற்போது மூன்றாவதாக சிவகவுடா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அம்பலமானது.
இதுமட்டுமன்றி, குழந்தைகளின் மருத்துவச் செலவு எனக் கூறி அனந்தமூர்த்தியிடம் இருந்து ரூ. 20 லட்சத்திற்கும் மேல் சுதாராணி கறந்துள்ளார். இந்த விவகாரத்தில் மற்றொரு திருப்பமாக, சுதாராணியின் முதல் கணவர் வீரேகவுடாவும் தற்போது காவல்நிலையத்தின் கதவைத் தட்டியுள்ளார்.
காதலித்து மணம் முடித்த என்னை, 'உனக்கு கார், பைக் ஓட்டத் தெரியவில்லை' என ஏளனம் செய்து பிரிந்த சுதாராணி, என்னிடம் இருந்து ரூ. 10 லட்சத்தைப் பறித்துக் கொண்டார் என அவர் பகீர் புகார் அளித்துள்ளார்.
பலரைத் திருமணம் செய்து கொண்டு லட்சக்கணக்கில் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ள இந்த 'நவீன மாயமோகினி' சுதாராணியைத் தேடித் தொட்டபள்ளாப்புரா போலீசார் தற்போது வலைவீசி வருகின்றனர்.