வீதியில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்தியவர்களால் உயர்தர வகுப்பு மாணவி ஒருவருக்கு தொந்தரவு என்றும், அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியும் அங்கு பணி புரியும் பொலிஸார் அசண்டையீனமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதி ஒருவரால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டில் உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் கல்வி கற்றுக் கொண்டிருந்த நிலையில் சிலர் வீதியில் இருந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டது தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியபோது பொலிஸாரை உடனடியாக அனுப்புவதாக அவர் கூறினாலும் பொலிஸார் நீண்ட நேரமாக வராத காரணத்தால் மீண்டும் பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியவேளை அவர் வெளிக்களத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளனர்.
அந்த இலக்கத்திற்கு தொடர்புகொண்டு விடயத்தை கூறியவேளை "பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு பதிவு செய்யுங்கள். அதன் பின்னரே வருவோம்" என்று கூறியுள்ளனர். அப்படி முறைப்பாடு செய்தால் தனிப்பட்ட ரீதியாக முரண்பாடுகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறை காணப்படுவதால் தான் குறித் இடத்திற்கு போக முடியவில்லை. இல்லாவிட்டால் போயிருப்போம் என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் பதிலளித்துள்ளார்.
இது சம்பவம் குறித்தும் இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதிருக்கவும் ஒருங்கிணைப்பு குழு தலைவரால் பொலிஸாருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
