காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சட்டத்தரணியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று(30.01.2026) விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சம்பவம் மேலும் தெரியவருவதாவது, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், தனது காரியாலய பணிக்காக ஏழைக்குடும்பத்திலுள்ள 24 வயதுடைய யுவதி ஒருவரை கடந்த 2023 தொடக்கம் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
இவ்வாறு வேலைக்கு அமர்த்திய யுவதிக்கு வார சம்பளமாக 3 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில், யுவதி தனிமையில் இருக்கும் போது சட்டத்தரணி, அடிக்கடி பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார்.

அதற்கு குறித்த பெண் இடமளிக்காத வேளையில், உணவில் மயக்கம் மருந்து கலந்து கொண்டு தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார். அதன்பின்னர், யுவதிக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், யுவதிக்கு திருமணமாகி, ஒரு வாரத்தின் பின்னர், மருத்துவ பரிசோதனையில் அவர், 12 வாரங்கள் கொண்ட மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டறியப்பட்டுள்ளது.