நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி நேற்று (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
தரம் 08 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ள நிலையில், மாணவிக்கு அடிகாயங்கள் மற்றும் உள்காயங்கள் ஏற்பட்டு தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த ஆசிரியர் வழக்கமாக பாடசாலை மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பதாகவும், மாணவ, மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் வந்துள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவி தெரிவித்துள்ளார்.அது போலவே நேற்று (05) மாணவியின் பெற்றோரை கூறி தகாத வார்த்தைகளால் திட்டியும் கடுமையாக கன்னம் மற்றும் செவி பகுதிகளில் தாக்கி இறுதியில் தலையை பிடித்து மேசையில் வைத்து முதுகு பகுதியிலும் ஆசிரியரின் முழங்கையால் தாக்கினார்.
இதனால் வலி தாங்க முடியாமல் எனக்கு சிறுநீர் கசிவும் ஏற்பட்டது. பாடசாலை முடியும் வரை அதே சீருடை மற்றும் பாதணியுடன் வீடு திரும்பினேன் என மாணவி தெரிவித்தார்.
பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும் உள்காயங்களையும் காட்டியுள்ளார்.தொடர்ந்து மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும். பொலிஸ் நிலையத்தில் மாணவி மூலம் முறைப்பாட்டை பதிவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஆசிரியர் நானுஓயா பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளார்.அதேவேளை அந்த ஆசிரியர் பல மாணவர்களை பாடசாலையில் தாக்குவது வழமை என்றும் குறித்த ஆசிரியரால் ஏற்கனவே ஒரு மாணவன் மீது தும்புத்தடி கொண்டு தாக்கிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணை மூலம் அறிய முடிகிறது.
இந்நிலையில் மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
