புனித ரமழான் மாதத்தின் ஆரம்பத்தைத் தீர்மானிக்கும் நோக்கில், வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை பிறையை அவதானிக்குமாறு கத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கத்தாரி நாட்காட்டியின்படி, ஹிஜ்ரி 1447 ஷஃபான் மாதம் 29 ஆம் திகதியான அன்று மாலை (பெப்ரவரி 17), முஸ்லிம்கள் அனைவரும் ரமழான் பிறையைத் தேடுமாறு பிறை பார்க்கும் குழு அறிவித்துள்ளது. அன்றைய தினம் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இக்குழுவின் விசேட கூட்டம் அமைச்சகத்தின் தலைமையகத்தில் நடைபெறும்.
புனித பிறையைக் கண்டவர்கள், உடனடியாகத் தங்களின் சாட்சியங்களை தஃப்னா (Dafna) பகுதியில் அமைந்துள்ள அமைச்சகக் காரியாலயத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ரமழான் நோன்பின் ஆரம்பம் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
