ஆசிரியர் தொழிலுக்கு காத்திருப்போருக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


இலங்கை ஆசிரியர் சேவையின் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்கும் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.


ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலில் (2026.02.02) சில தகுதிக்கான காலப்பகுதிகள் தற்போது திருத்தப்பட்டுள்ளன.


முக்கிய திகதி மாற்றங்கள்:


1. தகைமை பூர்த்தி செய்ய வேண்டிய திகதி


கல்வி மற்றும் ஏனைய தகைமைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டிய கடைசி திகதி 2026 மார்ச் 05 வரை நீடிக்கப்பட்டுள்ளது. (முன்னர் இது 2025.06.30 ஆக இருந்தது) .


விண்ணப்பதாரிகள் 10.02.2023 அன்றைய திகதியில் தமக்குரிய வயது எல்லையை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.


2. 10.02.2023 அன்று அரச சேவையில் இருந்த பட்டதாரிகளுக்கு பின்வரும் நிபந்தனைகளின் கீழ் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது:


-தற்போது சேவையில் உள்ளவர்கள்: 10.02.2023 அன்று 40 வயதை தாண்டாதவர்கள் மற்றும் 2026.03.05 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


-விலகியவர்கள்: 10.02.2023 அன்று அரச சேவையில் இருந்து, பின்னர் முறையான அனுமதியுடன் விலகியவர்களும் 2026.03.05 இற்கு முன்னர் பட்டப்படிப்பை முடித்திருந்தால் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.


மாகாண ரீதியான நியமனங்கள்:

விண்ணப்பதாரிகள் தமது நிரந்தர வதிவிட மாகாணத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.


மாகாணத்திற்கு வெளியே நியமனம் பெறுபவர்களுக்கான நிபந்தனைகளை அந்தந்த மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு தீர்மானிக்கும்.


பாடங்களுக்கான வெற்றிடங்கள்:

விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் (ICT), தொழில்நுட்பவியல் மற்றும் ஆலோசனை வழிகாட்டல் போன்ற பல்வேறு பாடங்களுக்காக மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் அடங்கிய புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.