அசைவ பிரியர்கள் பலருக்கும் சிக்கன், மட்டன் போன்ற உணவுகளே ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுத் தேர்வாக இருக்கும். ஆனால் அவற்றைவிடவும் சிறந்ததாக மீன் அறியப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு வாரம் 2 முதல் 3 முறை மீன் சாப்பிடுவது சிறந்தது என்று அமெரிக்க இதய சங்கம் பரிந்துரைக்கின்றது. குறிப்பாக எண்ணெய் சத்துமிக்க மீன்களைத் தேர்ந்தெடுப்பது அதிக நன்மைகளைத் தரும் என்கின்றனர். ஆனால் எல்லா மீனும் ஒரே நன்மையை தருவதில்லை.
அதனால்தான் மீன் வாங்கும்போது விலையை கவனிப்பது, மீனின் தரத்தை கவனிப்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்தது நாம் என்ன மீன் வாங்குகிறோம் என்பதும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக நோய் பாதிப்புகள் ஏதேனும் இருப்பவர்கள், தேர்ந்தெடுத்து மீன் வாங்க வேண்டும் என்கின்றனர். அந்தவகையில், எந்த நோய் இருப்பவர்கள் என்ன வகை மீன் வாங்கலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
1) உடல் சோர்வாகவும், பலவீனமாகவும் உணர்பவர்கள் வஞ்சிர மீன் சாப்பிடலாம். இது உடலுக்கு பலத்தை கொடுக்கும். காரணம் 100 கி. வஞ்சிர மீனில், சுமார் 15 – 25 கிராம் வரை புரதம் உள்ளது. இவை தசை வளர்ச்சியை தூண்டி, உடல் பலவீனம் குறைகிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின் பி12 உடலுக்கு உடனடி ஆற்றலையும் வழங்கும். தாதுக்கள், இரும்புச்சத்தை அதிகப்படுத்தி ரத்த சோகையை தடுத்து, உடலை புத்துணர்வாக்குகிறது.
அடிக்கடி டென்ஷன் ஆவோர், மூட்டு வலி அல்லது முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கான சிறந்த தீர்வு, மத்தி மீன்கள். இதற்கு காரணம், இந்த மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள். இவை மூளையில் செரடோனின் மற்றும் டோபமைன் ஆகிய மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை அதிகப்படுத்தி, மனதை தேவையற்ற பதற்றம், கோபத்திலிருந்து தடுத்து மகிழ்ச்சியான சூழலில் வைத்துக் கொள்ள உதவும். அதேபோல மூட்டு வலிக்கு முக்கியக் காரணமான உடல் வீக்கத்தை மத்தி மீனில் உள்ள எண்ணெய் சத்துக்கள் குறைக்கின்றன. இது கீல்வாதம் மற்றும் தசைப் பிடிப்புகளுக்குச் சிறந்த மருந்தாகும். கால்சியம், வைட்டமின் டி அதிகம் இருப்பதால் முதுகு வலியும் குறையும்.
உடல் எடை அதிகம் இருப்பவர்கள், ரத்த அழுத்தம் அதிகம் இருப்பவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் ஆகியோர் அயரை மீன் சாப்பிட்டு வரலாம். இதிலுள்ள நிறைந்த புரதச்சத்தும் குறைந்த கொழுப்பும் பசியை கட்டுப்படுத்தி, தேவையில்லாத உணவை தவிர்க்கவைத்து எடை குறைப்புக்கு உதவுகிறது. போலவே இதிலுள்ள ஒமேகா-3 அமிலங்கள், மூளையின் மெலடோனின் சுரப்பை தூண்டி நல்ல தூக்கத்திற்கு உதவும். உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும்.
அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படுவோர், கண் பிரச்சனை உள்ளவர்கள் சங்கரா மீன் சாப்பிட்டு வரலாம். ஏனெனில் இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் செலினியம் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். அதுவே வைட்டமின் ஏ கண் பார்வைத்திறனை மேம்படுத்த உதவும்.



