2027 ஆம் ஆண்டு வரை அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (06-02-2026) நடைபெற்ற அனர்த்த நிவாரண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2025 முதல் 2027 வரையான சம்பள உயர்வுத் திட்டத்திற்காக 33,000 கோடி ரூபா செலவிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் தலா 11,000 கோடி ரூபா வீதம் மூன்று கட்டங்களாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.வரவு செலவுத் திட்டத் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, 2027 இற்கு பின்னரே ஏனைய கொடுப்பனவுகள் பற்றிப் பரிசீலிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்கள் எவ்விதத்தில் முன்னெடுக்கப்பட்டாலும், திட்டமிட்டபடி சம்பள உயர்வே முன்னுரிமை பெறும் என உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயல் அனர்த்த பாதிப்பிலிருந்து நாடு மிகக் குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி, சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகள் தொடரும் என அவர் எச்சரித்துள்ளார்.பணமோசடியைத் தடுக்கவும், குற்றங்களை ஒடுக்கவும் சர்வதேசத் தரத்திலான புதிய சட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார வெற்றிகளை மக்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
