நாட்டில் நிலவும் விசேட சூழ்நிலை கருதி அரசாங்கத்தினால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி ஹட்டன் ஹிஜிராபுர பகுதியில் குறைந்த வசதிகளுடன் நடத்தப்பட்ட மேலதிக வகுப்பு ஒன்றினை ஹட்டன் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஹட்டன் ஹிஜிராபுர பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் வகுப்பு ஒன்று நடைபெறுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, ஹட்டன் தலைமையகப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த இடத்திற்குச் சென்றனர். இந்த வகுப்பினை ஹட்டன் நகரிலுள்ள பிரதான தமிழ் பாடசாலை ஒன்றின் இரண்டு ஆசிரியர்களே நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அங்கு கற்பித்தலில் ஈடுபட்டிருந்த இரு ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கிய காவல்துறையினர், வகுப்பில் இருந்த மாணவர்களை உடனடியாக வீடுகளுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கமைய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்கள் எவரும் மேலதிக வகுப்புகளை நடத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அரசின் இந்த விசேட பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகளை மீறிச் செயற்பட்டமையாலேயே காவல்துறையினர் இந்த அதிரடித் தலையீட்டை மேற்கொண்டுள்ளனர்
