மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவது சவாலாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய நிலையில் அடுத்த 2 மாதங்களுக்கு மட்டுமே தடையின்றி எரிபொருள் வழங்க அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்க முடியும் எனக் கூறினார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், சில எரிபொருள் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போர் நீடித்தால் விலையில் கடும் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்தார்.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு டொலர் பற்றாக்குறையால் உருவானது. ஆனால் தற்போது இலங்கையிடம் 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு உள்ளதால், நிதிச் சிக்கல் இல்லை என்றும், விநியோகப் பாதைகளில் ஏற்படும் தடைகளே தற்போதைய கவலை என்றும் அவர் குறிப்பிட்டார்.
விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டால், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள நட்பு நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பப் போர் முறைகளால் நீண்டகால பாதிப்புகளைக் கணிப்பது கடினம் என்றும் ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டினார்.
